Tuesday, June 5, 2012

என் வசந்தம்...



இளவரசியும்
உன்னிடம் தோற்றுப் போவாள்
என் இதய அரசி நீ என்பதனால்..

என் முற்றதத்து பூக்கள்
மலரும் மகிழ்ச்சியை விட
உன் புன்னகை
என் சந்தோஷ விடியலை எழுதுகிறது..



பகட்டுக்காய்
வேசம் போட்டு பாசம் வைக்கும்
மனிதர்களுக்கு மத்தியில்
உன் நிஜ அன்பு
நிலவின் ஒளியாய் என்னை நனைக்கிறது..



முகச்சாயங்களில்
அழகு ராணி பட்டம் வாங்கும்
மேக்கப் ராணிகளுக்கிடையில்
நீ இயற்கையாய் வந்து
என் மனதை இழுத்தெடுக்கிறாய்
உன் அழகு....அது கொள்ளை அழகு..



உன் காந்தப் பார்வையால்
ஊசியாய் ஒட்டிக் கொள்கிறேன்
உன் அழகை ரசிக்க முடியாமலும்
என் பார்வையை திருப்ப முடியாமலும்
உன்னிடம் தோற்றுப் போகின்றேன்..



சில நேரம்
மனச் சுமைகளால்
வியர்த்துக் கொட்டும் என் மேனியை
சாமரம் வீசும் உன் வார்த்தைகளால்
குளிர்மைப் படுத்துவாய்
அப்போது..என் வீட்டு மின் விசிரியை வென்று நிற்பாய்..









Thursday, May 3, 2012

உன் கண்ணால் தூங்கிக்கொள்கிறேன்


மனம் வேர்த்துப் புழுங்கிய நேரம்,இளைப்பாற ஏதாவது கிடைக்குமா என்று வானொலியில் தேடினேன்.முள்ளின் நடையில் ஹைதராபாத் இடறியது.உருதுக் கவியரங்கம் “தில் அன்மோல்தா” (இதயம் விலை மதிப்பற்றதாக இருந்தது) என்ற சொற்கள் என்னை பிடித்து நிறுத்தின.வசியம் செய்யப்பட்டவன் போல சொற்களின் பின்னால் நடக்கத் தொடங்கி விட்டேன்.கவிதை தொடர்ந்தது…


  இதயம்
  விலை மதிப்பற்றதாக இருந்தது
  இப்போதோ அதற்கு
  ஒரு விலையும் இல்லை

என்ற கஜலின் முதலடியைப் பாடி விட்டுக் கவிஞர் நிறுத்திக் கொண்டார். ஏன் அப்படி என்று ஆர்வம் குடைந்தது. கஜலின் கவர்ச்சியே இந்த உத்தியில்தான்,கவிஞர் மீண்டும் முதலடியைப் பாடினார்.ஆர்வம் அதிகரித்தது.பிறகு அடுத்த அடியை பாடி முடித்தர்.

  வாங்கிய ஒருத்தி
  திருப்பிக் கொடுத்துவிட்டுப்
  போய்விட்டாள்!

அடடா!என்ன பரிதாபமான வியாபாரம்.திருப்பிக் கொடுத்து விட்டுப் போனவள் மீது கோபம் பொங்குகிறது.ஒன்பதாயிரம் இதயமா இருக்கிறது? ஒன்றில் நஷ்டமானால் மற்றொன்றில் சம்பாதித்து விடலாம் என்று நினைப்பதற்கு?விலை கொடுத்தா வாங்கி இருப்பாள்.இருக்காது அதுதான் விலை மதிப்பற்றதாயிற்றே! இதயப் பண்டமாற்றுச் செய்திருப்பாள்.அல்லது இந்த பைத்தியக்காரர் சும்மாவே தூக்கிக் கொடுத்திருப்பார்.ஒரு வகையில் ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.உடைத்து தராமல் முழுமையாகவே கொடுத்திருக்கிறாளே!இன்னொரு வகையில் யோசித்துப் பார்த்தால்,இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.முழமையாக இருந்து மட்டும் என்ன பயன்?மதிப்பே போய் விட்டதே!முன்னாலும் விலை மதிப்பில்லை,இப்போதும் விலை மதிப்பில்லை!ஓ! எத்தனை பேரிடத்தில் இப்படி இதயங்கள் மூலையில் கிடக்கின்றனவோ?

மற்றொரு கவிஞர்..
  நான் ஏழைதான் ஆனால்
  வள்ளலாகவும் இருந்தேன்


என்று ஆரம்பித்தார்,காதலியைப் பார்த்துத்தான்.என்ன அப்படி வழங்கியிருப்பார்?அந்தக் கவிஞராவது விலை மதிப்பற்ற இதயத்தை வைத்திருந்தார்.அவர் தொடர்ந்தார்…

  நீ ஒன்றுமே இல்லை
  உனக்காக நான்
  பிரார்த்தனைகள் தந்தேன்.

ஏழ்மையிலும் கொடுக்க முடிந்ததற்காக நிமிர்ந்து நிற்கும் அவருடைய அழகான கர்வம் எவ்வளவு இனிமையானது!அவருக்கு முன்னால் அவள்தான் எவ்வளவு சிறுத்து போய் நிற்கிறாள்!

  மக்களின் சொத்தை
  அடித்துப் பிடுங்காதீர்கள்


என்று ஆரம்பித்தார்,ஏஜாஸ், அடடா!என்ன நேர்மை என்று வியந்தேன்.ஏதாவது நீதி போதனையே என்று பயமாகவும் இருந்தது.மனிதர் மகா குறும்புக்காரர் அடுத்து என்ன சொன்னார் தெரியும்h?

  பேசாமல்
  மருமகனாகி விடுங்கள்
  எல்லாச் சொத்தும்
  உங்களிடம் வந்து விடும்


வெறும் நகைச்சுவையா இது?நாட்டில் இன்று பகிரங்கமாக நடக்கும் கொள்ளைதானே இது?அதுவும் மாப்பிள்ளை என்ற முகமூடியில்!

பழைய தமிழில் காதலைத்தான் ‘களவு’என்பார்கள்.இப்போது கல்யாணத்தைதான் ‘களவு’ என்று சொல்ல வேண்டும்.பாவிகள் தமிழையே மாற்றி விட்டார்களே!அதுவும் எப்படிப்பட்ட களவு?பெண்ணின் கன்னத்தில்‘கன்னம்’ வைத்து அப்பன் சொத்தைக் களவாடுவது.

நூர் என்ற கவிஞர் வாழ்க்கையிடம் பரிதாபமாகக் கெஞ்சிக் கொண்டிருந்தர்.

  வாழ்க்கையே!
  உன் முகவரி  தேவை
எதற்காக?

  உன்னைப் பிரிந்தால்
  மறுபடியும்
  எப்படிச் சந்திப்பேன்?


என்று தம் ஆற்றாமையைப் புலம்பிக் கொண்டிருந்தர்

  வாழ்க்கையே
  உன் முகவரி தேவை

எத்தனை ஆழமான வரிகள்!வாழ்க்கையின் முகவரி கிடைப்பது எத்தனை கடினமான காரியம்?யார் யாரோ இதுதான் வாழ்க்கையின் முகவரி என்று தருகிறார்கள்,தேடிப் போய் பார்த்தால்தான் தெரிகிறது,அங்கே வாழ்க்கை இல்லையென்று.நம்முடைய எத்தனை கடிதங்கள் திரும்பி வந்திருக்கின்றன முகரியாளர் இல்லை என்று! எத்தனை பேர் வாழ்க்கையைத் தேடுவதிலேயே ஆயளைச் செலவழித்து விடுகிறார்கள்!

கவிஞர் அதிர்ஷ்டசாலி,என்றைக்கோ வாழ்க்கையை எதிர்ப்பட்டிருக்கிறார்.பிரிந்துவிடுவோம் என்ற பயம் உடனே வந்திருக்கிறது.புத்திசாலி வாழ்க்கையிடமே அதன் முகவரியைக் கேட்கிறார்.இதிலிருந்தே தெரிகிறது அவர் வாழ்க்கையை எங்கோ வழியில் சந்தித்திருக்கிறார் என்பது,இந்த வாய்ப்புக் கூட நம்மில் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கிறது?

அதே கவிஞரின் சிந்தனையிலிருந்து மற்றொரு கிரணம் பாய்ந்தது.

  என் வீடு இடிந்தாலென்ன
  உன் வீடு இடிந்தாலென்ன


என்று தொடங்கினார்.இதயம் படபடத்தது அடுத்துச் சொன்னார்
  
புயலுக்கோ பாதை தேவை

ஈவிரக்கமற்ற இயற்கையின் விதி;யை எவ்வளவு அற்புதமாகச் சொல்லிவிட்டார்.புயல் மட்டும்தானா இப்படி?நம்முடைய சமூகத்தில்தான் எத்தனை வகைப் புயல்கள் இவற்றின் பாதைக்காக எத்தனை பேருடைய வாழ்க்கைகள் இடிக்கப்பட்டு விடுகின்றன?

நூர் என்றால் ஒளி என்று பொருள்.கவிஞரின் புனைப் பெயர் நூர் அதை வைத்தே அவர் விளையாடினார்.

  ஒவ்வொரு விளக்கிற்கும்
  ஒளி தேவை
  இப்போதோ “ஒளி”க்கும்
  ஒரு விளக்கு
  தேவைப்படுகிறது!


விளையாட்டா இது?வினையாட்டு! எவ்வளவு பெரிய சக்திக்கும் ஆதாரம் ஒன்று தேவைப்படுகிறதே!கவிஞர் நம்முடைய நிலையையும் அல்லவா இதில் வெளிப்படுத்திவிடுகிறார். அவர் ‘ஒள’தான் இருந்தாலும் அவரையும் தாங்கிக் கொண்டு நிற்க வாய்ப்பு,வசதி வேண்டியிருக்கிறதே.இவை இல்லாமல் எத்தனை ‘ஒளி’கள் ஏற்றப்படாமலே போயிருக்கின்றன!

‘இனாயதீ’என்ற கவிஞர்

  நானோ அவளுக்கு
  தினந் தோறும் கடிதம் எழுதுகிறேன்


என்று தொடங்கினார்.

  பேனா இல்லை
  காகிதம் இல்லை
  மை இல்லை


எவ்வளவு அழகான கடிதம்,எழுதப்பட்ட காதல் கடிதத்தை விட எழுதப்படாத கடிதம்தான் அழகானது.அப்படியே எழுத நினைத்தாலும் எழுதி விட முடியுமா? வலைக்குள் மீன் சிக்கும்,தண்ணீர் சிக்குமா?

‘இனாயதீ’ மீண்டும் தொடர்ந்தார்.

  உன் கண்கள்
  என் கண்கள் இல்லையா


என்று காதலியைப் பார்த்து கேட்டார்.எதற்காக இவ்வளவு அழகாக கேட்கிறார் என்று துடித்தேன்.

உன் கண்ணால்
கொஞ்சம்
தூங்கிக் கொள்கிறேன்


என்று அவர் முடித்த போது என்னால் தாள முடியவில்லை.வானொலியை நிறுத்தினேன்.தூங்குவதற்காகக் கண்களைத் தேடினேன்.

(..கவிக்கோ அப்துல் ரகுமானின் “அவளுக்கு நிலா என்று பெயர்”; நூலில் நான் லயித்துப் போய் காதலாய் மேய்ந்ததை என் வலைப் பூவில் பகிர்ந்து கொள்கிறேன்..)

Saturday, March 17, 2012

மொழியின் மௌனம்...



உன்னால் மட்டும்தான் முடியும்
என் வார்த்தைகளை ஊமையாக்க
மொழிகளை வர்ணம் தீட்டி
ஊரறிய பேசும் நான்
நீ வந்ததும் மௌனமாகிறேன்...

உணர்வுகளை மொழி பெயர்த்து
அர்த்தங்களை வகுக்கும் உன்னால்
என் மௌனங்களை
ஏன் புரிந்து கொள்ள முடியாமல் போனாய்...

காதல் கதைகளை
காது நிறைய கேட்கும் என்னால்
என் காதலைத்தானே
 சொல்ல முடியாமல் போகிறது
எத்தனைதான் வீராப்பு காட்டினாலும்
உன்னிடம் நான் வெறும் காகிதம்தான்...

நகைச்சுவை நடிகனைப் போல்
குறும்புத்தனமாய் பேசித்திரியும்
என் வார்த்தைகள்
உன்னிடம் மௌனமாகவே அமர்கிறது
நீயோ கல்யாண வீட்டைப் போல்
கலகலப்பாய்த்தான் இருக்கிறாய்
என்ன செய்ய..
ஓர் அழையா விருந்தாளியைப் போல்
உன் அழகை ரசிப்பதுதான்
இப்போதுகளில் என் தலைவிதியாச்சு...





Wednesday, February 29, 2012

நீ வந்துதான் போனாய்...


ஆர்ப்பாட்டமில்லாமல்
நீ வந்து போனாய்
உன் நினைவுகள்
கடல் அலையாய்
எனக்குள் அடித்துக் கொண்டிருப்பதை
உன் மனமறியுமா..?


இரவு
பொழுதை கவ்விக் கொண்ட நேரத்தில்
உனதான வருகை
என்னை முழுவதுமாய் ரசிக்க வைத்தது..


உடல் களைப்புற்ற தருணத்திலும்
உன் அழகு மங்கவில்லை
நீ புன்னகையை விரித்த போது
நான் விரல் கடித்து
 விரல் புன்னாய்ப் போனதை
உனக்கு எப்படிச் சொல்வேன்..


இரவுகளில்
நிலாவையும்,நட்சத்திரங்களையும்
ரசிகக்கத் தெரிந்த எனக்கு
இப்போதுகளில்
உன்னை மட்டும்தான் ரசிக்க முடிகிறது
ஒவ்வொரு இரவுகளிலும்..


நீ தொலை தூரமாகியும்
தூர்ந்து போகாத உன் வார்த்தைகளும்
வந்து போன கால் தடங்களும்
உன் புன்னகையும்
நினைவுகளால் என்னை ஆசுவாசப்படுத்துகிறது..




Tuesday, January 31, 2012

வானொலியில் செய்தி வாசிப்பது எப்படி


வானொலியே செய்திகளை விரைவில் கொண்டு செல்லும் ஒர் சாதனமாகும்.இதனால் வானொலிச்செய்தியானது மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானது,குக்கிராமத்தில்,அடர்ந்த காட்டில்,கடல்களில்,வேலைகள் செய்து கொண்டும்,வாகானத்தில் பிரயாணம் செய்து கொண்டும்,நாட்டு நடப்புக்களையும்,உலக நடப்புக்களையும், வானொலிச் செய்தியறிக்கை மூலமாக மாத்திரமே இலகுவாக தெரிந்து கொள்ளலாம்.

சகல செய்திகளும் முக்கியமானது ஆனால் எமது உள்ளுர் செய்திகள் எமக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்தது அதிலும் குறிப்பாக ஒவ்வொருவரும் தம்மை நேரடியாகத் தாக்கும் செய்திக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுத்து கேட்பார்கள்.எனவே வானொலியில் 10 நிமிடங்கள் வாசிக்கும் செய்தியறிக்கையானது அந்த 10 நிமிடங்களும் மக்களின் வாழ்க்கையில் 60 வருடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களையும் உள்ளடக்கியிருக்கும் என்பதால்,எந்தக்காட்சிகளுமின்றி குரல் வழிமூலமாக வரும் வானொலி செய்தியறிக்கையை  வாசிப்பவர்கள் மிக கவனமாக வாசிக் வேண்டும்.

வாங்க செய்தி வாசிக்க...

*.செய்தி வாசிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னதாக சமூகமளியுங்கள்

*முழுச் செய்தியறிக்கையும் உங்கள் கையில் கிடைக்கும் போது இரண்டு நிமிடங்களே வாசிப்பு நேரத்திற்கு இருக்கக் கூடும்.இதற்கு உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.அந்த வேளைகளில் பரபரப்பு அடையாதீர்கள்.

*.பல அம்சங்கள் முன்கூட்டியே கிடைத்துவிடும் கவனமாகவும்,உரத்தும்,வாசித்துப் பாருங்கள்,ஏனென்றால் எழுத்துப்பிழை, வசன அமைப்புச் சிக்கல்,மொழிபெயர்ப்பில் பிழை இப்படி பல இருக்கலாம்.நீங்கள் அதனை உரத்து வாசிக்கும் போதுதான் மூளைக்கு தவறுகள் நன்கு புலப்படும்..

*.நீங்கள் சரிவர செய்தி வாசிப்பதானால் அறிக்கையில் தரப்பட்டுள்ளவற்றை சரிவர புரிந்து கொள்வது அவசியம்.எனவே செய்தி ஆசிரியரிடம் விளக்கம் கேளுங்கள்..

*.உச்சரிப்பை நன்கு தெரிந்து கொள்ளுங்கள் செய்தி ஆசிரியர் வேலையில் மும்முரமாகயிருந்தால் தெரிந்த வேறொருவரிடம் கேளுங்கள்..

*.வசனங்களை முற்றுமுழுதாக மாற்றும் பொழுது அர்த்தம் பிசகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..

*.சிலர் செய்தி வாசிக்கும் பொழுது செய்தியில் கவனம் செல்லாது,அவரது வாசிப்பில்தான் நேயர்களின் கவனம் செல்லும் காரணம் அவர் மோசமாக செய்தி வாசிப்பதுதான்.நல்ல செய்தி வாசிப்பாளர்  வாசிக்கும் பொழுது செய்தியில்தான் நமது கவனம் செல்லும் அவர் செய்தி வாசித்து முடித்த பின்னர்தான் அவரைப்பற்றிப் பாராட்ட தோன்றும்..

*.கவனமாகவும் சற்று உரத்தும் வாசிப்பது நல்லது ஆனால் அதற்கான விசேட குரல் தேவையில்லை வழமையை விட சற்று குரலை உயர்த்தினால் போதுமானது..

*.பல ரகப்பட்ட செய்திகள் இருக்கும்.அப்போது சிறு மாறுதல் வேண்டும் குரலில், ஆனால் நடிப்புத் தொனி வருதல் கூடாது..

*.முக்கியமான விடயங்களில் சிறிது அழுத்தம் கொடுத்தும்,குரலை சிறிது தாழ்த்தியும் வாசிக்கலாம்..

*.கண்கள் முன்னே செல்ல குரல் பின்னால் தொடர வேண்டும்..

*.நம்பிக்கையில்லாவிட்டால் உங்கள் குரலில் தடுமாற்றம் தெரியும்..

*.சிறிதாக தடங்கினால் அது பாதகமில்லை மன்னிப்புக் கோரவேண்டியதில்லை ஆனால் பாரதூரமான மாற்றம் என்றால் நிச்சயம் மன்னிப்புக் கோர வேண்டும்..


*.நீங்கள் பதட்டம் இல்லாமலிருப்பின் உங்கள் சுவாசமும் வழமைபோல் இருக்கும்.வசனத்துக்கு வசனம் வாசித்தல் கூடாது,வாசகத்திற்கு வாசகம் வாசித்து நிறுத்த வேண்டும்..

*.பெரிய சொற்கள் வரும்பொழுது ஒரே மூச்சில் வாசித்து முடிக்காமல் சிறிது நிறுத்தி வாசிக்கலாம்..

*.உங்கள் முகத்தை ஒலிவாங்கியிலிருந்து அங்குமிங்குமாக திருப்பாதீர்கள்..

*.இரு அம்சங்களுக்கு இடையில் சிறிது மௌனம் அவசியம்..

*.உங்கள் அபிப்பிராயம் தொனிக்க வாசித்தல் கூடாது..

*.அதிகாரபூர்வமாக ஆனால் அகங்கார தொனியில் வாசித்தல் கூடாது..

*.உரக்கச் சப்தமிட்டு வாசித்தலும் கூடாது..

*.உங்கள் குரலை நீங்களே ரசிக்க ஆரம்பித்து விடாதீர்கள்.அனுபவம் உள்ளவர்கள் கெட்போன் போடுவார்கள் ஏனெனில் அவர்கள் தமது குரலை கவனிக்காமல், பிழைகளைக் கவனிக்கும் அனுபவத்தை பெற்றிருப்பதால்..


*.ஒரு அம்சம் முடிந்ததும் அது பற்றி மறந்து அடுத்து வரும் அம்சத்தில் கவனம் செலுத்தி வாசிக்கவும்..

*.இயற்கையான சரளமான போக்கு விரும்பத்தக்கது..

*.சரியான உச்சரிப்பு சரியான மாத்திரையளவில் இருப்பது அவசியம்..

*.எந்த ஒரு செய்தி வாசிப்பாளரையும் நீங்கள் பாவனை செய்யாதீர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு,நல்லதென்று நாலு பேர் சொன்னால் தொடர்ந்து உங்கள் பாணியைக் கடைப்பிடியுங்கள்,சரியாக இல்லையென்றால் சிறிது கவனித்து மாற்றம் செய்யுங்கள்..

*.வேறு செய்தி வாசிப்பாளர்களின் வாசிப்பை விமர்சன ரீதியாகக் கவனித்து நல்ல அம்சங்களைத் தெரிந்து பின்பற்றுங்கள்..

என்னால் முடிந்தளவு ஓர் சிறந்த செய்தி வாசிப்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டிருக்கிறேன்.இவ்வாறான அம்சங்களை கடைப்பிடிக்கின்ற போதுதான் ஓர் செய்தி வாசிப்பாளரினால் சிறந்த முறையில் செய்தி வாசிக்கவும் முடியும்,அதேவேளை நல்ல செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்தவும் முடியும் எனவே வானொலி செய்தி வாசிப்பாளர்கள் தங்களது அளப்பரிய பொறுப்புணர்ந்து இவற்றை மறந்து விடாது செயற்படுங்கள்...


Wednesday, January 11, 2012

விழியின் வலி...



என் இளமையை தின்று
அவள் வீசிய பார்வையால்
மயங்கி நின்ற அவளின் விழியோரம்
காதலாய் கவ்விக்கொண்டேன்...


உன் கூட்டுக்குள்
என்னை முடக்கியது போல்
உன் விழிகளுக்குள்
யார் யாரையெல்லாம் மறைத்து வைத்திருக்கிறாய்...


புனிதம் போர்த்திய உன் பார்வை
எனக்கு சொந்தமென்று நம்பியிருந்தேன்
இன்னுமொருவனுக்கு
உன் பார்வையை வாடகைக்காய் அனுப்பிய போது
அது காமமாய் அலைந்தது...


இப்போது
பல தெருக்கள் கடந்து
நீ மணம் வீசுகிறாய் கண் கவர் காதலியென்று
உன் விழியோரம் மேய்ந்த என் காதல்
ஊர் தாண்டி அழுகிறது
இவன் காதல் பாவமென்று...


உந்தன் இனிப்புக்காய்
கரையானாய் அலைந்தேன்
உன் உணர்வுகளில் வெட்கமானேன்
ஆனால்,இப்பொழுதுகளில்
எந்தன் விழிகள் உன்னுடன் முரண்படுகிறது
அவ்வேளைகளில் என் கண்கள் சிவக்கிறது...




Thursday, January 5, 2012

அடுக்கு மாடியில் ஓர் சக்கரை...



உன் உடம்பின் இயலாமையை
உனக்குள் மறைத்துக் கொண்டு
என்னை திருப்திப் படுத்த
உள்ளூர உன்னை மீறிய
வலிகளை தாங்கிக் கொண்டாய்...


தலையணையை
அணைத்துக் கொண்டு
கட்டிலில் சுதந்திரமாய்
ஓய்வெடுக்க வேண்டிய நீ
உன் தலை வலியை
எங்கோ காற்றில் மேய விட்டு
புதுப் பெண்ணாய்
என்னை ஆசுவாசப்படுத்தினாய்...


பல நேரமாய்
ஒட்டியிருந்த என்னை
குத்திக் குதற
சில நேரம் நீ நினைத்திருக்கலாம்
அதையும் அடக்கி
உன்  மென்மையான
புன்னகையை மலர்ந்தாய்
அது ஆயிரம் இதயங்களையும் தாண்டி
காதல் தரும் புன்னகை...


வெறுங் கையுடன்
உன் அரண்மனைக்குள் வந்த போது
விருந்தாளியாய் கவனித்தாய்
உன் பெரு மனதால்
நான் வெட்கித்துப் போனேன்...


அங்கு வந்திருக்கக் கூடாது
உனக்கு தொந்தரவு தந்திருக்கக் கூடாது
உன் சக்தியை மீறிய இயலாமையால்
வாடி நின்ற உன் முகம் பார்த்து
என் மனம் அழுதது
உனக்கு உரிமையில்லாத நான்
உன் தலை முடியை கோதி
எப்படி ஆறுதல் படுத்துவேன்

இருந்தாலும்
உன் நலவுக்காய்
என் எல்லாப் பிரார்த்தனைகளுடனும்
உன்னிடமிருந்து விடைபெற்றேன்...