வேலை நிமித்தமாக பல வருடங்களாக வெளியூரில் வசிக்கின்றேன்.விடுமுறையில் ஊருக்குப் போய் திரும்புகின்றபொழுது,திருமணத்திற்கு பின் சந்திக்கின்ற முதல் பிரிவைப் போல் ஓர் சோகம் என்னுள் குடி கொள்ளும்.
அம்மா,அப்பா,அக்கா.அண்ணா,தங்கை,மருமக்கள்,நண்பர்களிடமிருந்து விடைபெறும் பொழுது ஓரத்தில் நின்று கொண்டு விழி நிறைந்த கண்ணீரோடு என்னைப் பார்க்கும் காதலியின் இனம் புரியாத பாசம் பயணத்திற்காய் புறப்பட்ட என்னை ஒரு அடியேனும் நகர விடாமல் அந்த இடத்திலேயே கட்டி வைக்கும்.காதலிப்பதற்கு முன் எத்தனையோ நாட்கள் தனிமையில் இருந்திருக்கிறேன்.உணர்ந்ததில்லை,இப்போதுதான் என்னை தனிமை தத்தெடுத்துக் கொண்டதாய் ஒரு தவிப்பு காதலின் கட்டுப்பாட்டுக்குள் கடந்து செல்லும் ஒவ்வொரு காதலர்களின் நினைவுகளும் கண்ணாடியில் தோன்றும் பிம்பங்களாய் என் மனக் கண்ணாடியிலும் பிரதிபலிக்கின்றன.
பல மனிதர்களின் உணர்வுகளின் மொழிகளையும்,கணினி நுட்பங்களையும்,கற்றுத் தெரிந்து கொண்ட எனக்கு நம் காதலின் உனதான வெட்க மொழியை புரியாமல் தடுமாறியிருக்கின்றேன் பல முறை,நீ கண்களை உருட்டுவதும்,மௌனம் சாதிப்பதும்,புன்னகைப்பதும், உன் வெட்க மொழியில் வெவ்வேறு அர்த்தமாமே,எந்த ஒரு அகராதியிலும் படித்ததாய் நினைவில் இல்லை இது போன்ற அழகிய அர்த்தங்களை.
ஒரு நாள் மாலைப் பொழுதில் கண்ணை மயக்கும் சுடிதார் அணிந்து வீதியால் நடந்து வந்த அழகை வண்டுகள் பார்த்திருந்தால் பொறாமைப் பட்டிருக்கும்,மயில்கள் மயங்கி போயிருக்கும்.மழை பெய்து ஓய்ந்த பின் சூடான தேநீர் கோப்பையுடன்,இனிப்பான பலகாரத்தட்டுக்களுமாய் என் அருகில் அமர்ந்து ஆசையாய் ஊட்டினாய்.உன் அன்பான தித்திப்பால் அப்போது இனிப்பான பலகாரம் இனிப்பின்றி போனது ஒன்றும் ஆச்சரியமில்லை.
வீட்டுக் கூரையில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளியின் சிதறல்களை ரசிக்கும் குழந்தையைப் போல் உன் மௌன மொழியை ரசிக்கவேணும்,மிட்டாய்க்காய் அடம் பிடித்து அழும் சிறு பிள்ளையைப் போல் உன்னிடம் செல்லத்தனமாய் அழுவதற்கேனும் முன்னையக் காட்டிலும் ஆவலாய் இருக்கிறேன்...
பாவம் கனவு பலிக்கவில்லை இப்படி எத்தனை நாட்களுக்கு கனவில் கடிதம் எழுதுவது....