Tuesday, December 20, 2011

தோழா...


எனக்குள்
சங்கமித்துக் கொண்ட
உன் நட்புக்காய்
என் உள்ளம் படும்பாட்டை
எப்படித்தான் உனக்கு சொல்வேனோ...

பழகிய பொழுதுகள்
பழசு படாமலிருக்கையில்
நாம் பேசிய வார்த்தைகள்
கெட்டுப் போகாமலிருக்கையில்
கண்ட கனாக்களெல்லாம்
பொய்யாக கரைந்தது எப்படி....

நாம் பழகிய நாட்கள்
உனக்கு ஞாபகமிருந்தால்
எல்லையில்லா நேசம் வைத்து
பழகிய என்னை
எப்படி மறப்பாய்...

Thursday, December 8, 2011

பேசாத வார்த்தைகள்...


குழந்தையின் உச்சரிக்கப்படாத வார்த்தைகளாய்
காதலின் மொழியின்றிய உணர்வுகளாய்
வாழ்க்கையின் தூரத்தில் நின்றழும்
குமரியின் பெருமூச்சாய்
குடிசைக்குள் கரைந்து போகும்
கனவுகளின் தொட்டிலாய்
ஆயிரம் ஆயிரம் உணர்வுகள்
பேசப்படாத வார்த்தைகளாய்
எனக்குள்ளேயே உருகிக் கரைகிறது...

Monday, December 5, 2011

ஏனோ புரியவில்லை...


பல கதைகள்
என் மனதில் குவிந்து கிடக்கிறது
உன்னிடம் சொல்வதற்கு
சொல்வதற்காய் உன் அருகில் வரும் போது
வார்த்தைகள் மறுத்தோடுகிறது
ஏனோ தெரியவில்லை...

சந்திக்கும் சந்தர்ப்பங்களில்
ஒன்றுமே சொல்லாமல்
மௌனமாய் பிரிந்து போகிறோம்
பல கதைகள் கேட்கத் தெரிந்த நமக்கு
நமது கதையைத்தான் சொல்ல முடியவில்லையே...

எப்படியாவது
உன்னிடம் ஏதாவது சொல்ல எத்தனிக்கும் போது
நான் உன்னிடம் செல்லாக்காசாகிப் போகிறேன்
எப்போதுதான் உன் மடியில் செல்லமாய் அரவணைப்பாயோ...

நீ என்னை கழித்து பார்த்தாலும்
நான் உன்னை சேர்த்துத்தான் பார்க்கிறேன்
நீ எப்படியானாலும்
உன்னை நான் நினைப்பதிலும்
கவிபாடுவதிலும் காலம் கழிகிறது...