Thursday, June 23, 2011

ஒலுவில் ஆய்வரங்கு

தமிழ்..என்று பலமுறை நாவைப் புரட்டுங்கள், 'அமுது' என்று படும்,அதேபோல் 'அமுது' எனப் பலமுறை உச்சரியுங்கள் 'தமிழ்' என்று படும்.அதனால்தானோ பாரதிதாசன் 'தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நிகர்' என்றாரோ,

இப்படியாக தமிழ்க்கனியின் சுவை பிழிந்த சாறை சுவைக்கவென அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேச கலாசார பெருவிழாவின் முன்னோடியாக ஒலுவில் அல் ஹம்ரா மகாவித்தியாலய மண்டபத்தில் ஆய்வரங்கு காலையில் ஆரம்பமானது.பிரதேசசெயலாளர் யூ.எல்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் யூ.எல்.அஸீஸ் அதிதியாகக்  கலந்து சிறப்பித்தார்.(இவர் இப்போது கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகயிருக்கிறார்.)

ஆய்வுக்கு காத்திரமான மூன்று தலைப்புக்கள்               எடுத்துக்கொள்ளப்பட்டன.அத்துறையில் அப் பிரதேசத்தில் தேர்ந்த வளவாளர்களால் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

தென்கிழக்கின் தேனமுதக் கவிநாதமாம். நாட்டார் இலக்கியமும்,படித்தவர்களும்,பாமரர்களும் பாகுபாடின்றி பேசுகின்ற பிரதேச மொழி வழக்காறுகள், முஸ்லிம்களிடத்தில் இன்று அருகி வருகின்ற குடிவழிப்பாரம்பரியம் என்பன ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பேசு பொருள்கள்.மூன்று அமர்வுகளாக இடம்பெற்ற இந் நிகழ்வில்,நாட்டார் இலக்கியம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.நாட்டார் பாடல்களை மிகச் சிரமப்பட்டு தேடி எடுத்து ஆய்வு செய்து நூலுறுப்படுத்தியுள்ள எஸ்.முத்துமீரான் முன்னிலையில். ஆசிரிய ஆலோசகர் என்.சம்சுதீன் தனது ஆய்வினை முன்வைத்தார்.

எஸ்.முத்துமீரான் தன் முன் குறிப்பில் ,தயவு செய்து நாட்டார் பாடல் என்று கொச்சைப்படுத்த வேண்டாம்.கிராமிய இலக்கியம் என்று சொல்லுங்கள்.இந்தப்பிராந்தியத்தில் இலக்கிய ஆய்வாளர்கள் என்று சொல்பவர்கள் கிராமிய இலக்கியத்தில் ஆர்வம் காட்டத் தவறிவிட்டனர்.என்றும் அங்கலாய்த்தார்.மேலும் தாலாட்டுப்பாடல்கள்,வாழ்த்துப்பாடல்கள் என்பனவும் இதில் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.
மனித வாழ்வின் பிறப்பு முதல் இறப்பு வரையான அத்தனை வாழ்க்கைக் கோலங்களையும் சித்தரித்துக் காட்டுகின்ற நாட்டார் இலக்கியங்களை மிகவும் இலாவகமாகவும்,தெளிவாகவும் நகைச்சுவை ததும்பும் வகையிலும் தனது ஆய்வில்,ஆசிரிய ஆலோசகர்    என்.சம்சுத்தீன் முன்வைத்தார்,நகைச்சுவைப்பாடல்கள்,நையாண்டிப்பாடல்கள்,காதல் பாடல்கள்,வாதுகவிகள்,அல்லது வசைப்பாடல்கள்,தூதுப்பாடல்கள்.இறைவனிடம் பிரார்த்திக்கும் பாடல்கள்,அவலத்தை இறைவனிடம் ஒப்புவிக்கும் பாடல்கள்,திரட்டுப்பாடல்கள்,என்பவற்றை ஆய்வாளர்,ரசனைக்குகந்த விதத்தில் வழங்கினார்.அதன் பாடல்களை இஹ்சான் பாடியதும்,கிராமியச் சூழலுக்கே அனைவரையும் அழைத்துச் சென்றது.
இரண்டாவது அமர்வாக,பேச்சு மொழி வழக்காறு எடுத்துக் கொள்ளப்பட்டது.பாலமுனை பாறூக் முன்னிலையில் ஆசு கவி அன்புடீன் தனது ஆய்வினை முன்வைத்தார்.பாலமுனை பாறூக் தனது முன் குறிப்பில், மனிதன் தனது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு உதவும் ஊடகமே மொழியாகும்.காதலன் காதலியிடம் கண்களால் பேசுகிறான்.தாய் மகளிடம் உதடுகளால் பேசுகிறாள்.இதனை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.வாயைத் திறந்து பேசுகிற போது கட்டாயம் மொழி தேவைப்படுகிறது.இதுதான் ஒரு மனிதனை மொழி ரீதியாக அடையாளப்படுத்துகிறது.ஆக,மனிதனுக்கு மொழி விழி போன்றது என்றார்.

ஆசு கவி அன்புடீன் தனது ஆய்வினை முன்வைக்கின்ற போது 'கல் தோன்றி மண்தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி தமிழ்'இந்தத் தமிழ் மொழி நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் வித்தியாசமாகப் பேசப்படுகிறது.ஒருவர் பேசுகின்ற போது ,அவரது ஊரை அடையாளம் கண்டுகொள்ளலாம்.பொதுவாக கிழக்கு மாகாணத்தவர்கள் பேசுகின்ற தமிழ் நாடகப்பாங்கானது,என்று கூறிய அன்புடீன்.மிகவும் தெளிவாகவும் காத்திரமாகவும்,மொழி வழக்காற்றினை மூன்று வகையாக வகுத்துக் கூறினார்.
01.உறவு முறை
02.மதச் சடங்கு முறைகள்
03.உணவு வகைகள்...
இவ்வாறு பிரித்து ,இதில் இப்பிரதேச மக்கள் பயன்படுத்துகின்ற சொற்களையும்,பேசுகின்ற விதங்களையும் முன்வைத்தர்.

மூன்றாவது அமர்வாக கிழக்கிலங்கை முஸ்லிம்களிடையே காணப்படும் பிரதேச குடிவழிப்பாரம்பரியம் எடுத்துக் கொள்ளப்பட்டது.ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் அப்துல் லதீப் முன்னிலையில், தென் கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் விரிவுரையாளர் எஸ்.எம்.ஐயூப்  தனது ஆய்வினைச் சமர்ப்பித்தார்.அப்துல் லத்தீப் தனது முன் குறிப்பில், குடி என்பது தமிழர்களின் ஒரு பகுதியினரான முக்குவரில் இருந்து வந்தது எனவும்,ஆய்வாளர் ஐயூப் இந்தத் துறையில் சிறந்த முறையில் ஆய்வு செய்யக்கூடியவர்.சமூகவியல் துறை விரிவுரையாளராக இருப்பதனால்,இதனை சமூகவியல் கண்ணோட்டத்திலும் அணுகியிருக்கலாம் என்றும் கூறினார்.

ஆய்வாளர் ஐயூப் தனது ஆய்வினை முன்வைக்கின்ற போது,முக்குவரை  திமிலர் தொல்லைப்படுத்திய போது முக்குவர் முஸ்லிம்களின் உதவியினை நாடினர்.முஸ்லிம்கள் திமிலரை விரட்டியடித்தனர்.எனவே முஸ்லிம்கள் திமிலரை விரட்டியடித்ததனால்,முக்குவரின் பாதுகாப்புக்காகவும்,உதவி செய்வதற்காகவும்,தங்களது பெண்களை முஸ்லிம்களுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.இதன் மூலமாக குடிவழிப்பாரம்பரியம் முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவியது என்றார்.


குடிக்குத் தலைமை வகிக்கின்ற மரைக்காயர்மார்கள் காலப்போக்கில் சமூர்த்தி முத்திரை பெற்றதனால், மக்களிடத்திலிருந்த செல்வாக்கு வெகுவாக இழந்து வந்தது.ராசாம்பிள்ளை குடி,வெள்ளரசன் குடி,என்பன இன்று தமிழ்,முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுவதாகவும்,குடிகளின் வகைகளையும் அது முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவிய முறைகளையும் தெளிவாகவும்,ஆழமாகவும் ஆய்வினை முன்வைத்த ஆய்வாளரின் கருத்துக்கள் சபையோர்களைக் கவர்ந்தது.

பிரதேச செயலாளர் யூ.எல்.நியாஸ் உரையாற்றுகையில்,ஆய்வாளர்கள் தங்களது ஆய்வினை மிகச் சிறப்பாக முன்வைத்ததனை அவதானிக்க முடிந்தது.ஆனால்,நாட்டார் இலக்கிய பாடல்களுக்கு முஸ்லிம்கள் உரிமை கோர முடியாது.ஏனெனில் முஸ்லிம்களுக்கென தனித்துவமான இஸ்லாமிய இலக்கியம் இருக்கிறது.மற்றும் அவர்கள் மாத்திரம் கவி பாடினார்கள் என்பதனை முற்றாக மறுக்கிறேன்.நான் நேரடியாக சென்று கள ஆய்வினை மேற் கொண்ட போது இறக்காமத்தைச் சேர்ந்த மீரா உம்மா பாடியிருப்பதை என்னால் அறியமுடிந்தது.என்றார்.குடியானது ஒருவரை அந்தஸ்துப்படுத்தும்.அதன் மூலம் அவர், பெருமை,மமதை என்பன கொள்வதற்காகவோஅல்ல,மாறாக குலங்களாகவும்,கோத்திரங்களாகவும் தங்களை அடையாளப்படுத்துவதற்காகவே முஸ்லிம்கள் மத்தியில் குடிவழிப்பாரம்பரியம் காணப்படுகிறது.இருந்த போதும் இன்று கணிசமான முஸ்லிம்கள் மத்தியிலிருந்து அவை மறைந்து வருகிறது.என்றார் பிரதேசசெயலாளர் யூ.எல்.நியாஸ்....

இவ்வாறு ஆய்வுகளும்,அவதானங்களும் முடிவடைகின்ற போது நேரம் மூன்று மணியைத் தாண்டியிருந்தது.மிகவும் ஆழமாகவும்,சுவையாகவும்,காத்திரமாகவும் நகர்ந்து சென்ற ஆய்வில் சில குறைபாடுகளும் இருந்தன.நாட்டார் இலக்கியம் சம்பந்தமாக எஸ்.முத்துமீரான் ஆவேசப்பட்டதையும்,அங்கலாய்த்ததையும்,சிலரைக் குற்றம் சாட்டியதையும், அந்த இடத்தில் தவிர்த்திருக்கலாம்..அந்த ஆய்வரங்கிற்கு அழைக்கப்பட்டவர்களில் அநேகர் பிரதேச செயலகத்தில் பணியாற்றுபவர்கள்,இதனால் அட்டாளைச் சேனை பிரதேசத்திலே வளர்ந்து வரும் கலைஞர்களும்,இலக்கிய ஆர்வலர்களும் அங்கு அழைக்கப்படாமை பெரும் குறையாக இருந்தது.அவர்களையும் இனங்கண்டு ஏற்பாட்டுக் குழுவினர் அழைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.....
சிலர் வலிந்து  அழைக்கப்பட்டதைப் போன்று ஆய்வின் போது பின்வரிசையில் தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருந்தனர்.இன்னும் சிலர் கதிரையை விட்டு எழும்புவதும்,வெளியே போவதும்,வருவதுமாகவும் இருந்தனர்.ஆய்வுகளில் ஆர்வமுள்ளவர்களை கருத்தில்; கொண்டு  அழைப்புக்கள் கொடுக்கப்பட்டிருந்தால்,ஆய்வு காத்திரமாகயிருந்திருக்கும். மற்றும் அந் நிகழ்வினை ஒரு விடுமுறை தினத்தில் நடத்தியிருக்கலாம்.

எது எப்படியிருந்தாலும், இப்பிரதேசத்தில் பல வருடங்களுக்குப் பின்னர்,இது போன்ற கலாசார விழாவினை மிகச் சிரமப்பட்டு ஏற்பாடு செய்த பிரதேச செயலகம்,பிரதேச கலாசார பேரவை என்பவற்றை பாராட்டத்தான் வேண்டும்.கலைகளையும்,கலைஞர்களையும் ஊக்குவிப்பதற்காக இது போன்ற நிகழ்ச்சிகளை வருடா வருடம் நடத்த வேண்டும்.....

( இது,2007.12.16 ம்திகதி ஞாயிற்றுக்கிழமை தினகரன் பத்திரிகையில் வெளியான எனது கட்டுரை )


No comments:

Post a Comment