Monday, November 28, 2011

கவனிப்பாரற்று...


பூக்களைப் போல்
மென்மையாய் வருடிய காதல்
பாலைவனமொன்றில்
கருகிக் கொண்டிருக்கிறது...

இன்பம் தரும் என்று
காதல் படகில் பயணித்த போது
துடுப்பிழந்து
மெல்ல,மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கிறது...

வாழ்க்கையின் கனவுகள்
நிறைவேறாமல் நீண்டு கொண்டே போகிறது
வயது போக ஞாபக மறதி குடி கொள்கிறது
ஆனால்,அவளது நினைவுகள் மட்டும்
குறையவில்லை
அவள் பல கோணங்களில்
என்னை கிளறிக் கொண்டிருக்கிறாள்...

இதயம் தன்னில்
தேக்கி வைத்த காதல்
கவனிப்பாரற்று
உடல் முழுவதும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது...

 நான் எழுதிய
காதல் வரிகள்
வாசிக்கப் படாத
வரலாற்றுப் புத்தகமாய்
மேசையில் கிடக்கிறது....

Tuesday, November 15, 2011

திரும்பிப் பார்...


உன் குரலை கேட்பதற்காய்
நான் தவமிருக்கையில்
நீ பேசாமல் இருப்பது
என்னை வருத்தப்படுத்துகிறது
இந்த குயிலின்  ஓசையின்றி
நாட்கள் கவலையோடு நகர்கிறது...

முகவரி தவறிய
கடிதங்களைப் போல்
உன் கைத் தொலை பேசியும்
என்னிடமே திரும்பி வருகின்றன
விலாசம் தேடி அலுத்துப் போன
தபாற் காரனைப்போல்
உன் இலக்கத்தை பல முறை அழுத்தி
பயனற்றுப் போகையில்
என் விரல்கள் தெலைபேசியிடம் சண்டை பிடிக்கின்றன...

குழந்தையைப் போல்
அடம்பிடிப்பது உன்னிடம்தான்
சில வேளை குழந்தைத் தனமாய்
பேசும் போது தவறிழைத்தால்
உன் மனச்சிறைக்குள் வைத்து
தண்டனை தா
உன்னை விட்டு பிரியும்
சக்தி எனக்கில்லை...

உன் மனசு
என் வார்த்தைகளால்
காயப்பட்டால் மன்னித்துக்கொள்
நீயின்றி வெறிச்சோடிப் போகும்
என் வாழ்க்கைக்கு வசந்தம் தர நீதான் வேண்டும்...

என் கலையாத காதல்
கனவாகிப் போன கதையை
உன்னிடம் இறக்கி வைத்த பிறகும்
ஏன் கோபித்துக் கொள்கிறாய்
கலைகளை நன்கு கற்ற நீ
என் மனக் கவலைகளை
ஏன் புரியாமல் போகிறாய்...

Thursday, November 10, 2011

நீரை எப்படி அருந்துவது...



71 வீதம் நீரால் நிரம்பிய பூமிப் பந்தில் வாழும் நாம்  நீரோடு போராடிக் கொண்டிருக்கின்றோம்.நீரானது எம் உயிர் வாழ்வுக்கும் ஏனைய தேவைகளுக்கும் மிகவும் அத்தியவசியமானது.அதேபோல் இந்த உலகில் வாழும் ஏனைய ஜீவராசிகளுக்கும்,மரம்,செடி,கொடி,இன்னோரன்னவற்றுக்கும் நீர் உயிர் நாடி,இறைவனால் இந்த உலக வாழ் உயிரினங்களுக்கு வழங்கப்பட்ட உன்னதமான கொடைதான் நீர்,நமக்கு மிக இலவசமாக கிடைக்கின்ற பக்கவிளைவற்ற மருத்துவ  குணம்  கொண்ட இந்த நீர் அதன் இயற்கைத் தன்மையிலிருந்து மாறுகின்றஅல்லது மாற்றப்படுகின்ற போது சில வேளை நமது உயிரையும் குடிக்கிறது.இலங்கையைப் பொறுத்தளவில் தங்கள் வளவுகளில் அல்லது பொதுவாக தோண்டப்பட்ட கிணுறுகளிலிருந்து குடிப்பதற்கும் இதர தேவைகளுக்கும் நீரைப் பெறுவர்.ஆனால் காலம் செல்ல  குடி மக்கள் பெருத்த போது நீர் அசுத்தமடைவதனையும் தவிர்க்க முடியாமல் போனது.இதனால் நமது மூலை முடுக்கெல்லாம் வோற்றர் சப்ளை மூலமாகவே நீர் எடுத்துச் செல்லப்படுகிறது.இந்த நீரைத்தான் நம்மில் பாவிப்போர் அதிகம்.....

கவிதையில் காதலை பாடிக்கொண்டிருக்கும் நான் ஏன் இப்படியான பதிவை போடுகிறேன் என்று நீங்கள் உங்கள் தலைமயிரை கிள்ளியெடுப்பது எனக்கு புரிகிறது.நான் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறைக்காக ஊருக்குப் போயிருந்த போது என் கையில் ஒரு துண்டுப்பிரசுரம் கிடைத்தது.அது மிகப் பெறுமதியான துண்டுப் பிரசுரம் நமதூர்களில் அரசியலுக்கும்.ஒருவனை வம்புக்குயிழுப்பதற்கும்,அடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களைத்தான் அதிகம் பார்த்திருக்கின்றேன்.ஆனால் அதற்கு முற்றிலும் மாறுபட்டு நல்ல சிந்தனையாளர்கள் எழுதிய துண்டுப்பிரசுரம்.நீங்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனது பதிவில் பதிவு செய்கிறேன் வாசித்துப் பாருங்கள்...
அந்தப் பிரசுரம் இப்படித்தான் அமைந்திருந்தது
எல்லோருக்கும் இனிய
ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்கள்

அதிக நீர் அருந்துவோம் ஆரோக்கியம் பெறுவோம்

ஃசாதாரணமான ஒருவர் ஒரு நாளைக்கு 3 லீற்றர் தொடக்கம் 6 லீற்றர் வரை நீர் அருந்த வேண்டும்

ஃ நாளாந்தம் ஒருவர் 6 லீற்றர் அதற்கு அதிகமாக நீர் அருந்துவது    ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

ஃ அதிக நீர் பருகுபவர்களுக்கு பல வியாதிகள் கிட்டவும் நெருங்காது.அத்துடன்  அதிகம் நீர் பருகுவது உற்சாகத்தையும்,மகிழ்ச்சியையும்,முகப் பொலிவையும் தரும்

ஃ குளிர்ந்த நீரைப் பருகுவதைத் தவிருங்கள்.இளம் சூடான நீரை அல்லது சாதாரண நீரையே பருகுங்கள்...


வோற்றர் சப்ளை நீரை அப்படியே அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது
வோற்றர் சப்ளை நீரை பருகுமுன் செய்ய வேண்டியவை


01.சிறிது நேரம் கொதிக்க வைத்திருந்து ஆறிய பின் பருகவும்

02உருளையான போத்தலில் அடைத்து 8 முதல் 12 மணி நேரம் சூரிய ஒளி படுமாறு செய்து பருகவும்

03.வடிகட்டப்பட்டு குறைந்தது 1|2 மணித்தியாலமாவது சேமித்து வைத்திருந்து  பருகவும்

04.குறைந்தது 2 மணித்தியாலமாவது சேமித்து வைத்திருந்து மேலாக எடுத்து பருகவும்

வோற்றர் சப்ளை நீரை பாவிப்பவரா நீங்கள் இதனை கடைப்பிடித்தால் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது


Monday, November 7, 2011

எனக்குள் நீ...


 எனதான எல்லா அசைவுகளிலும் 
உனதான நினைவுகள்தான்
பூக்களாய் மலர்கின்றது...

என் வேலைத்தளத்திலும்
என் தனிமையிலும்
என் மனசுக்குள் பம்பரமாய்
நீ சுழன்று கொண்டிருக்கிறாய் 
ஒரு நிழற் படமாய் 
நீ அடிக்கடி என்னை சந்தித்து போகிறாய்...


ஆறாமல் வேதனை தரும்
சில காயங்களை  
கவிதையில் இறக்கி வைக்க 
பேனாவையெடுத்தால்
உன்னைப் பற்றியதான 
வார்த்தைகள்தான் வருகின்றது
ஆக,உன்னைத் தவிர 
வேறொன்றையும் என்னால்
எழுத முடியவில்லை.


என் பாதையில் 
பாவையொன்று நடந்து போகும் சத்தம் 
நீ நடந்து செல்லும் சத்தமாய்  
என் காதுகளுக்கு கேட்கிறது 
வந்து பார்த்தால் 
எவர் எவரெல்லாம் போகின்றனர் 
ஆனால்,நீ மட்டும் வருவதாயில்லை 
எதிர்பார்ப்புக்களுடன் ஓடி வந்த நான் ஏமாந்து போவேன்
இப்போதுகளில்
என் அக,புற தோற்றங்களில்
உன் விம்பங்கள்தான் காட்சியாய் விழுகிறது...

இத்தனைக்கும் காரணம்
நீ நிலவைப் போல்
தூரமாய் இருந்த போதும் 
நினைவுகளால் தினம் தினம்
என்னை தழுவுகிறாய்...


Wednesday, November 2, 2011

உனக்குத் தெரியுமா..?



ஒரு இரவு
தூக்கம் என் கண்களை
அதிகம் தழுவிய போதும்
உன் வார்த்தையால்
என் விழியோரம்
எண்ணெய் ஊற்றினாய்
அந்த இரவு தூக்கமின்றி
உன் வார்த்தையோடு
கடினப்பட்டுக் கொண்டது...


தமிழை அமுதமாய்
உறிஞ்சிக் குடிக்கும் நீ
அந்த மொழியால்
என் மனதை பலவீனப்படுத்துகிறாய்
வார்த்தைகளால் வெறுக்கும் நீ
வானமளவு பொழியும் அன்பை
உன் மனதுக்குள்
குடை கொண்டு மறைத்து வைத்திருக்கிறாய்...


புறாவைப் போல்
பறந்து திரியும் நீ
உன் நினைவுகளுடன் போராடும்
என்னுடன் சன்டை பிடிக்கிறாய்
உன் ராச்சியத்தில்
சிட்டுக் குருவி போல் அமர வரும் போதெல்லாம்
உன்  விழியின் கற்கள் கொண்டு
என்னை விரட்டுகிறாய்
அப்போதெல்லாம் கண்ணாடியாய்
நொறுங்கிப் போகின்றேன்...


கண்கள் கண்டதெல்லாம்
படம் பிடித்துக் கொள்ள
நான் ஒரு சினிமாக்காரனல்ல
இதயம் தொட்ட உன்னை
கண் கலங்காமல் காக்கும்
உந்தன் காவலன்...


எப்போதும்
பிரிவை வேண்டி நிற்கும் உன்னிடம்
ஒரு பூனைக் குட்டியைப் போல்
உன் அன்புக்காய்
தவமிருக்கிறேன்...