Monday, October 31, 2011

வடக்கு முஸ்லிம்


தாய் பிறந்த மண்ணை
முத்தமிட காத்திருக்கையில்
மகனின் சுவாசம்
அடங்கிப் போனது அகதி முகாமில்
தன் சேய்யின் நிறைவேறா  ஆசையுடன்
அவளது கால்கள் சக்தியின்றி
எட்டு மேல் எட்டு வைத்து நகர்கின்றன
சொந்த நிலத்தை தரிசிப்பதற்கு...

வீசப்பட்ட கற்களாய்
ஆங்காங்கே அலைக்கழிகிறது
துப்பாக்கி முனையில்
வெளியேற்றப்பட்ட என் உறவுகள்
தன் வீட்டில்  விளக்கேற்றி வாழ
எத்தனை பிரார்த்னைகளும்,வேண்டுதல்களும்
இந்த பாவப்பட்ட அதிகாரிகளிடம்
எங்கள் வாழ்க்கையைப் போல்தான்
இந்த மீள் குடியேற்றமும்
அரையும் குறையுமாக...

களி மண்ணில் புதைந்த பாதங்களும்
வேளாண்மையில் சிந்திய வியர்வைத் துளிகளும்
பன்னங் கீற்றுக்களில் தவழ்ந்த கதைகளும்
எங்களை சுமந்து நின்ற பள்ளிக்கூடங்களும்
புழுதி கிளப்பி நடந்து திரிந்த தெருக்களும்
பலகாரம் பரிமாறிய உறவுகளும்
காலையும்,மாலையும் காலம் கடத்திய கடற்கரையும்
எங்கள் ஞாபகங்களை சுமந்து நிற்க
கண்ணீருடன் விடை பெற்றோம்
மீண்டும் அவைகளை
ஆறத் தழுவும் கனவுகள்
எப்போது நனவாகும்

 தசாப்தங்கள் தாண்டியும்
முந்தானையை வேலியாக்கி
தெருவோரங்களில் மானங்காத்து வாழ்கிறோம்
தொலைதூரமில்லா
எங்கள் ஊர்கள்
சிலரால் இன்னும் தொலைக்கப்படுகிறது
"தயவு செய்து" என்று விண்ணப்பித்து
அலுத்துப் போய்விட்டது
அப்பாவி முகத்துடன்
எத்தனை முறை அதிகாரிகளிடம் கெஞ்சுவது
எங்கள் நிலத்தை
எங்களுக்கு தருவதற்கே
இட வெளிகள் நீண்டு போகின்றது...

ஆயிரம்தான் தந்தாலும்
மழையில் கரையும் குடிசையாய்
காற்றில் பறக்கும் கூடாரமாய்
வாழ்க்கை கழிகிறது
உங்கள் ஆயிரங்கள் வேண்டாம்
எங்கள் ஆதனப் பூமியில் வாழ வைத்தால் போதும்
எப்போது நாங்கள் போவோம்...
புன்னகைத்த முகங்கள்
நெருப்பாய் வார்த்தைகளை கொப்பளித்தது
எங்களை வெளியேறச்சொல்லி
அன்று அழுதவர்கள்
இன்று முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்
எங்கள் மீள் குடியேற்றத்தில்...
வேரூண்டிய நிலத்தில்
பிடுங்கப் பட்ட
எங்கள் மரங்களையும், விதைகளையும்
எப்போது நடுவீர்கள்...?

Saturday, October 29, 2011

உன்னை பாடும் என் வரிகள்...



எனக்கு பிடித்த பாடலை ஒலிபரப்பி
கண்ணை மூடி ரசித்துக் கொண்டிருப்பது போல்
என்னை பிடிக்காத அவளின்
கவிதைகளை தினமும் வாசிக்கிறேன்
ஏனெனில் கவிதையில்
நானும் அவளும் ஒரே பல்லவி...

பாடல்களுக்கிடையில்
நான் வாசிக்கும் கவிதையில்
நீ அதிகம் வசிக்கிறாய்
அந்த கவிதையை காதலிப்போர் அதிகம்
ஆனால் நீ காதலிக்கவில்லை
காரணம் கேட்டால்
ஒரு வக்கீலைப் போல்
வாதிடுகிறாய்...

பிடித்த நிகழ்ச்சியில்
பேச வாய்ப்புக் கிடைக்காது
கவலைப் படும் ஒரு தீவிர ரசிகனைப் போல்
உன் அருகிலிருந்து பேச
வாய்ப்பின்றி ஏமாந்து போகிறேன்...

நேயர் விருப்பத்தில்
பிடித்த பாடலை கேட்க
அழைத்து,அழைத்து 
தொடர்பு கிடைக்காமல் 
நொந்துபோகும் நேயரைப் போல்
உன் தொலை பேசி
இயங்காத நாட்களில்
நான் இயங்க மறுத்த பொழுதுகள்
உனக்குத் தெரியுமா..?

கலையகத்தில் 
முணு முணுக்கும் பாடலைப் போல்
உன் பெயரை அடிக்கடி உச்சரிக்கிறேன்
உன் அழகான பெயரை உச்சரிப்பதால்
என் குரலும் அழகாகிறது...

என்னை 
பலர் சிலாகித்து பேசும் போது
உன்னை நினைத்து கொள்வேன்
நீதான் சிட்டுக் குருவி போல்
எனக்குள் இருந்து கொண்டு
பலரின் கண்களிலும்,காதுகளிலும்
கொண்டு சேர்க்கிறாய்...

எப்போது
நிகழ்ச்சி கிடைக்கும் என்று
ஆவலுடன் இருக்கும் அறிவிப்பாளரைப் போல்
உன் பதிலுக்காய் காத்திருந்து
நான் ஏங்குவதுண்டு...

கனவுகளுடன்
ஒலி வாங்கியை உயிர்ப்பிக்கும்
புதுமுக அறிவிப்பாளரைப் போல்
ஆயிரம் கனவுகள் எனக்குள்
உயிர்த்தெழுகிறது 
அத்தனை கனவுகளும்
எனக்குள்ளேயே கரைந்து போகிறது...

நான் வரிகளை எழுதுகிறேன்
நீ பாடுகிறாய்
நான் நினைப்பதை நீ சொல்லுகிறாய்
நீ நினைப்பதை நான் எழுதுகிறேன்
நீ பாடல் நான் வரி
நீ பாட மறுத்தால்
என் வரிகளை நான் யாரிடம் கொடுப்பேன்...

Tuesday, October 25, 2011

நீ அப்படியில்லை


நமது உடல்களின்
எங்கே ஒரு கோடியில்
எல்லைகளற்ற பாசம்
குடி கொண்டிருக்கிறது
ஆனால்,முரண்பாடுகளால்
இடவெளியை ஏற்படுத்திக் கொள்கிறோம்...

நானும் நீயும்
ஒத்திசைவற்றவர்களென
நீ அடம்பிடித்து நிற்க
நேர்மையின் கோட்டில்
எனக்குள் ஏற்றி வைக்கப் பட்ட காதலை
அதன் வலியை
எத்தனை முறை
கதறிக் கதறிச் சொல்லியிருப்பேன்...

இருட்டில்,
தலையணையை துணைக்கெடுத்து
அழுது உணர்ச்சிகளை கொட்டுகிறவள்
எனது உணர்வுகளை விலக்கி வைத்து
கல்லாயிருக்கிறாள்...

எனக்குத் தெரியும்
பூனைக் குட்டி மாதிரி
துள்ளித் திரியும்
அவளது வெள்ளை மனதில்
எனக்கான பாசம் இருக்கிறது
ஆனால்,மனச்சாட்சியிடம்
முட்டி முட்டி பின் வாங்குகிறாள்...

அழுகை,தவிப்புக்கள்
இருட்டின் அரவணைப்புக்கள்
என்னைப் போல் உனக்குமுண்டு
ஆனால்,ரோஜாப் பூப் போல்
உடம்பை வைத்திருக்கும் நீ
என்னைப் போல்
எப்படி தாங்குவாய்...



Monday, October 24, 2011

என்னை தாலாட்டும் பூ


எனதான கனவுகள்
கரைந்த போதும்
உனதான ஞாபகங்கள்
கலையாமல் எனக்குள் நீந்துகிறது...

என் உணர்வுகளுக்குள்
முரண்பட்டுப் போகும் உன்னை
முழுமையாய் நேசிக்கிறேன்
என் நெஞ்சுக்குள் வைத்து
கனவு காண்கிறேன்...

இராகமாய் கசியும்
தாலாட்டும் உன் வார்த்தைக்காய்
தவமிருக்கும் இந்த குழந்தை மனதின்
ஏக்கங்களை எப்படி உனக்குச் சொல்வேன்
எனதான எதிர்பார்ப்புக்கள்
என்னிடமே திரும்பி வருகின்றன
வாங்கிக் கொள்ளத்தான் யாருமில்லை...

பாசத்திற்காய்
உன்னைப் பார்ப்பேன்
சொற்களால் என்னை வெறுப்பாய்
உன் ஓரப்பார்வையால் பூத்தூவுவாய்
நீ தூவும் அந்தப் பூவில்
நான் அடையும் ஆனந்தம் உன் மனமறியுமா...?

சந்திப்புக்களை
தவிர்த்துக் கொள்ளும் நீ
ஒரு சந்தர்ப்பம் கொடு
நான் மௌனமாக்கிய வார்த்தைகளை
கொட்டித் தீர்ப்பேன்
உன் இதயம் நனையும் படி...

வலுவிழந்த வாக்குறுதியால்
உன் மனதை காயப் படுத்தவில்லை
தொலை பேசியில் வர்ண ஜாலம் தடவும்
பகட்டுக் காரன் நானல்ல
உயிராக நேசிக்கும் உன்னை
என் மனசுக்குள் வைத்து
வாழ விரும்புகின்றேன்...

நிலவைப் போல்
குளிர்ச்சி தரும் உனக்குள்
மழையாய் நனைய வருவேன்
அப்போது உன் கண்ணம்
சிவந்து போகும் வெட்கத்தினால்...

Saturday, October 22, 2011

எதை நான் எழுத...


ஏதாவது எழுதச் சொல்லி
தினம் அடம்பிடிக்கிறாய்
உனதான ஞாபகங்களை எழுதவா
எனதான ஏக்கங்களை எழுதவா
கடந்த காலம் தந்த வாழ்வின்
காயங்களை எழுதவா
எதைச் சொல்லி நான் எழுதினால்
நீ வாசிப்பாய்...
..................................

Friday, October 21, 2011

விடியலைத் தேடி...



நான் காற்றைப் போல் திரிந்தேன்
பூவைப் போல் நறுமணம் பரப்பினேன்
தண்ணீரைப் போல் பாய்ந்தோடினேன்
பூவாய்,காற்றாய்,நீராய்
இருந்த என் வாழ்க்கை
தேங்கிய நீரோடையைப் போல் அமைதியாகி
பனிக்கட்டியைப் போல் உறைந்து போகிறது
வசந்த விடியலைத் தேடி...
..........................................................

நமதான யுகத்தில்...


விண்வெளிக்கு
புறப்பட்டு ஒரு வீடு கட்டி
குடியிருக்க ஆசைப்படுகிறேன்...
வல்லரசாய் உனக்குள்
வன்மம் நிகழ்த்த நினைக்கப் போவதில்லை...
உன் மனசுக்குள் ஒரு பூவைப் போல்
மென்மையாய் குடியிருக்க விரும்புகிறேன்...
பரபரப்பாய் பறந்து திரியும்
மனிதர்களுக்கு மத்தியில்
அமைதியாய் வாழ
உன்னோடு புறப்பட்டு வருகிறேன்...
...........................................................................

Thursday, October 20, 2011

இனியும் வேண்டாம்...


 மரண பயம்
 உயிரெல்லாம் ஆக்கிரமிக்கிறது...
 சந்தோஷமின்றி
 நாட்கள் நகர்கிறது....
 நிம்மதியின்றி
மனசு அலை பாயுகிறது...
நீதிக்காய்
பாதங்கள் தெருவெல்லாம் திரிகிறது...
வாழ்தலில் விருப்பமின்றி
ஏக்கத்துடன் வாழ்க்கை கழிகிறது...
............................................................................

Wednesday, October 19, 2011

உயிரிலே கலந்து...


அந்தி வானம் கலைந்தோடுகையில்
உன் நினைவுகள் மேகமாய்
நகர்ந்து கொண்டிருக்கிறது
உனதான பாசம்
என்னுள் கலைந்து கரைகிறது..

தினம் உச்சரிக்கும் பாடலாய்
என் காதுகளுக்குள் ஒலிக்கிறாய்
நான் எழுதும் கவிதையில்
நிழலாய் வருகிறாய்
நான் நேசிக்கும் புத்தகமாய்
என் மனதுக்குள் வாசிக்கப்படுகிறாய்
உன் புன்னகையைப் போல்
எனக்குள் மகிழ்ச்சியாய்
நீ இருக்கிறாய்...

சில வேளை
அடம்பிடித்தலால் முரண்படுகிறாய்
வார்த்தையின் விலகுதலால்
வெறுத்துப் போகிறாய்
ஆதலால்,உன் வாசமின்றி
நான் வாடிப் போகிறேன்
நான் மலரவும், நீவாழவும்
வரம் கேட்டு நிற்கிறேன்...

Monday, October 17, 2011

நிறமற்ற கனவு...


மறந்து போன
நமது கடந்த நாட்களின் பாடல்
இனி மீண்டும் வரப் போவதில்லை...

மொழிகளை ஊமையாக்கி
உணர்வுகளை ஓரங்கட்டி
சைகைகளோடு பேசிக் கொண்ட போதும்
வலிகள் எதுவுமின்றி
மெதுவாய் பயணித்தது நமது காதல்...

வசீகரமும்,கவர்ச்சியும்
காதலின் படிமங்களுமின்றி
நாம் காதலர்களாக மாற்றப்பட்டோம்
ஆனால்,உலகக் காதல் போல்
நமது காதல் படரவேயில்லை...

துண்டிக்கப்பட்ட
உறவை மீளமைக்க
நாம் வடித்த கண்ணீரின் அளவு
சோகப் பாடலின் இசையைப் போல்
தேங்கிக் கிடக்கிறது என் மனதில்...

சூரியன் உதித்து மறையும் போதெல்லாம்
நான் வந்த உன் தெருவும்
நீ எட்டிப் பார்க்கும் ஜன்னலும்
குரல் எழுப்பும் உன் விழிகளும்
இப்போது முகவரியில்லாதவரினால்
வேட்டையாடப்பட்டுள்ளது...

 உனக்கான பரிசுகள்
உன்னை தேடி வரும் நாட்கள்
வெறுமையாய் என்னை கடந்து செல்கிறது
இப்போதுகனவுகளற்ற பொழுதுகளாய்
ஒவ்வொரு நாளும்
அர்த்தமின்றி பிறக்கிறது...



Tuesday, October 11, 2011

காவல்காரனாய் உன் பூந் தோட்டத்தில்


முழுவதுமாய் அவளை
ரசித்து முடிக்கும் முன்
என்னை உதறிவிட்டுப் போகிறாள்
புன்னகையோடு பார்ப்பவள்
இப்போது முறைத்து பார்க்கிறாள்...

அணைத்துக் கொண்டவள்
அராஜகம் செய்து தூரப்படுத்துகிறாள்
உன்னோடு எப்படி போராடுவேன்
வழியின்றி தடுமாறுகிறேன்
நான் வரைந்த நேர் கோட்டில்
உன் விரல்கள் புள்ளடியிடுகின்றன....

நாட் கணக்கில்
மனதார பேசியவள்
எதிரியைப் போல் தூர நின்று பார்க்கிறாள்
ஒரு விநாடி கொடு
என் நெஞ்சில் இருக்கும்
என் எதிர்பார்ப்புக்களை
உன் மடியில் கொட்டி விடுவேன்...

சந்தோஷங்களை
எனக்குள் உற்பத்தி செய்தவள்
சோகங்களை சொந்தமாக்கி விட்டுப் போகிறாள்
உன்னை அழகாய் வர்ணித்த என் பேனா
இப்போது சோகமாய் கசிகிறது கடதாசியில்...

என்னை புகழ்வதற்கு
நான் நியாயவாதியுமல்ல
உன்னை அசிங்கப் படுத்த
நான் இரக்கமற்றவனுமல்ல
என் உணர்வுகளை மதிக்காத போதுதான்
என்னை உரத்துச் சொல்கிறேன் உனக்கு அவ்வளவுதான்...

உன்னைத் தவிர
நான் நேசித்தவையெல்லாம்
மறந்து போய்விட்டது
இன்னும்
மறக்க முடியாமல் இருப்பது நீ மட்டும்தான்
ஒரு காவல் காரனாய் காத்திருப்பேன்
உனக்காக நான் பாத்தி கட்டிய பூந் தோட்டத்தில்
என்றாவது என்னை
புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையில்...



Thursday, October 6, 2011

நிஜமில்லா நிழலில்....


வார்த்தைகளை கோர்த்து
உன்னை சோடித்து
உன்னை ஏமாற்றுவதில்
எனக்கு விருப்பமில்லை...

வார்த்தைகளின் மாயைக்குள்
மயங்கி விழுந்து
மீள முடியாமல்
போராடும் பலரைப் போல்
நானும் நீயும்
வாழ்க்கையில் இணையாத போது
அந்தப் பாவத்தை எங்கு போய் தீர்ப்பேன்
ஆக.உன்னை ஏமாற்றுவதில்
எனக்கு உடன் பாடில்லை...

இனிப்பாய் பேசலாம்
உணர்வுகளை பகிரலாம்
வார்த்தைகளை விழுங்கி
கொஞ்சி மகிழலாம்
கன நேரம் கதை பேசி
காலம் கடத்தலாம்
புல்வெளியில்
நானும் நீயும் உருண்டு புரள ஆசை வரலாம்
இத்தனையும் பொய்யாகின்ற ஒரு நாளில்
நானும் நீயும்
வெறுத்து வாழ்வோம்
ஆக.இனி காதல் வார்த்தைகள் பேசி
 ஏமாற்றுவதில்
எனக்கு இஷ்டமில்லை...

தடுக்கப் பட்டவைகளை
விரும்பும் போது
பலரால் நாங்கள் வெறுக்கப்படலாம்
இல்லாத பொல்லாத  வார்த்தைகளால்
சில நேரம் இகழப்படலாம்
நிஜமற்ற  வாழ்க்கையில்
நிழலாய் பயணிப்பதற்கு
என் மனம் உறுத்துகிறது
உனதான  பாதையில் நீ பயணி
எனதான பாதையில் நான் போகிறேன்...