Thursday, June 23, 2011

ஒலுவில் ஆய்வரங்கு

தமிழ்..என்று பலமுறை நாவைப் புரட்டுங்கள், 'அமுது' என்று படும்,அதேபோல் 'அமுது' எனப் பலமுறை உச்சரியுங்கள் 'தமிழ்' என்று படும்.அதனால்தானோ பாரதிதாசன் 'தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நிகர்' என்றாரோ,

இப்படியாக தமிழ்க்கனியின் சுவை பிழிந்த சாறை சுவைக்கவென அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேச கலாசார பெருவிழாவின் முன்னோடியாக ஒலுவில் அல் ஹம்ரா மகாவித்தியாலய மண்டபத்தில் ஆய்வரங்கு காலையில் ஆரம்பமானது.பிரதேசசெயலாளர் யூ.எல்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் யூ.எல்.அஸீஸ் அதிதியாகக்  கலந்து சிறப்பித்தார்.(இவர் இப்போது கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகயிருக்கிறார்.)

ஆய்வுக்கு காத்திரமான மூன்று தலைப்புக்கள்               எடுத்துக்கொள்ளப்பட்டன.அத்துறையில் அப் பிரதேசத்தில் தேர்ந்த வளவாளர்களால் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

தென்கிழக்கின் தேனமுதக் கவிநாதமாம். நாட்டார் இலக்கியமும்,படித்தவர்களும்,பாமரர்களும் பாகுபாடின்றி பேசுகின்ற பிரதேச மொழி வழக்காறுகள், முஸ்லிம்களிடத்தில் இன்று அருகி வருகின்ற குடிவழிப்பாரம்பரியம் என்பன ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பேசு பொருள்கள்.மூன்று அமர்வுகளாக இடம்பெற்ற இந் நிகழ்வில்,நாட்டார் இலக்கியம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.நாட்டார் பாடல்களை மிகச் சிரமப்பட்டு தேடி எடுத்து ஆய்வு செய்து நூலுறுப்படுத்தியுள்ள எஸ்.முத்துமீரான் முன்னிலையில். ஆசிரிய ஆலோசகர் என்.சம்சுதீன் தனது ஆய்வினை முன்வைத்தார்.

எஸ்.முத்துமீரான் தன் முன் குறிப்பில் ,தயவு செய்து நாட்டார் பாடல் என்று கொச்சைப்படுத்த வேண்டாம்.கிராமிய இலக்கியம் என்று சொல்லுங்கள்.இந்தப்பிராந்தியத்தில் இலக்கிய ஆய்வாளர்கள் என்று சொல்பவர்கள் கிராமிய இலக்கியத்தில் ஆர்வம் காட்டத் தவறிவிட்டனர்.என்றும் அங்கலாய்த்தார்.மேலும் தாலாட்டுப்பாடல்கள்,வாழ்த்துப்பாடல்கள் என்பனவும் இதில் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.
மனித வாழ்வின் பிறப்பு முதல் இறப்பு வரையான அத்தனை வாழ்க்கைக் கோலங்களையும் சித்தரித்துக் காட்டுகின்ற நாட்டார் இலக்கியங்களை மிகவும் இலாவகமாகவும்,தெளிவாகவும் நகைச்சுவை ததும்பும் வகையிலும் தனது ஆய்வில்,ஆசிரிய ஆலோசகர்    என்.சம்சுத்தீன் முன்வைத்தார்,நகைச்சுவைப்பாடல்கள்,நையாண்டிப்பாடல்கள்,காதல் பாடல்கள்,வாதுகவிகள்,அல்லது வசைப்பாடல்கள்,தூதுப்பாடல்கள்.இறைவனிடம் பிரார்த்திக்கும் பாடல்கள்,அவலத்தை இறைவனிடம் ஒப்புவிக்கும் பாடல்கள்,திரட்டுப்பாடல்கள்,என்பவற்றை ஆய்வாளர்,ரசனைக்குகந்த விதத்தில் வழங்கினார்.அதன் பாடல்களை இஹ்சான் பாடியதும்,கிராமியச் சூழலுக்கே அனைவரையும் அழைத்துச் சென்றது.
இரண்டாவது அமர்வாக,பேச்சு மொழி வழக்காறு எடுத்துக் கொள்ளப்பட்டது.பாலமுனை பாறூக் முன்னிலையில் ஆசு கவி அன்புடீன் தனது ஆய்வினை முன்வைத்தார்.பாலமுனை பாறூக் தனது முன் குறிப்பில், மனிதன் தனது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு உதவும் ஊடகமே மொழியாகும்.காதலன் காதலியிடம் கண்களால் பேசுகிறான்.தாய் மகளிடம் உதடுகளால் பேசுகிறாள்.இதனை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.வாயைத் திறந்து பேசுகிற போது கட்டாயம் மொழி தேவைப்படுகிறது.இதுதான் ஒரு மனிதனை மொழி ரீதியாக அடையாளப்படுத்துகிறது.ஆக,மனிதனுக்கு மொழி விழி போன்றது என்றார்.

ஆசு கவி அன்புடீன் தனது ஆய்வினை முன்வைக்கின்ற போது 'கல் தோன்றி மண்தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி தமிழ்'இந்தத் தமிழ் மொழி நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் வித்தியாசமாகப் பேசப்படுகிறது.ஒருவர் பேசுகின்ற போது ,அவரது ஊரை அடையாளம் கண்டுகொள்ளலாம்.பொதுவாக கிழக்கு மாகாணத்தவர்கள் பேசுகின்ற தமிழ் நாடகப்பாங்கானது,என்று கூறிய அன்புடீன்.மிகவும் தெளிவாகவும் காத்திரமாகவும்,மொழி வழக்காற்றினை மூன்று வகையாக வகுத்துக் கூறினார்.
01.உறவு முறை
02.மதச் சடங்கு முறைகள்
03.உணவு வகைகள்...
இவ்வாறு பிரித்து ,இதில் இப்பிரதேச மக்கள் பயன்படுத்துகின்ற சொற்களையும்,பேசுகின்ற விதங்களையும் முன்வைத்தர்.

மூன்றாவது அமர்வாக கிழக்கிலங்கை முஸ்லிம்களிடையே காணப்படும் பிரதேச குடிவழிப்பாரம்பரியம் எடுத்துக் கொள்ளப்பட்டது.ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் அப்துல் லதீப் முன்னிலையில், தென் கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் விரிவுரையாளர் எஸ்.எம்.ஐயூப்  தனது ஆய்வினைச் சமர்ப்பித்தார்.அப்துல் லத்தீப் தனது முன் குறிப்பில், குடி என்பது தமிழர்களின் ஒரு பகுதியினரான முக்குவரில் இருந்து வந்தது எனவும்,ஆய்வாளர் ஐயூப் இந்தத் துறையில் சிறந்த முறையில் ஆய்வு செய்யக்கூடியவர்.சமூகவியல் துறை விரிவுரையாளராக இருப்பதனால்,இதனை சமூகவியல் கண்ணோட்டத்திலும் அணுகியிருக்கலாம் என்றும் கூறினார்.

ஆய்வாளர் ஐயூப் தனது ஆய்வினை முன்வைக்கின்ற போது,முக்குவரை  திமிலர் தொல்லைப்படுத்திய போது முக்குவர் முஸ்லிம்களின் உதவியினை நாடினர்.முஸ்லிம்கள் திமிலரை விரட்டியடித்தனர்.எனவே முஸ்லிம்கள் திமிலரை விரட்டியடித்ததனால்,முக்குவரின் பாதுகாப்புக்காகவும்,உதவி செய்வதற்காகவும்,தங்களது பெண்களை முஸ்லிம்களுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.இதன் மூலமாக குடிவழிப்பாரம்பரியம் முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவியது என்றார்.


குடிக்குத் தலைமை வகிக்கின்ற மரைக்காயர்மார்கள் காலப்போக்கில் சமூர்த்தி முத்திரை பெற்றதனால், மக்களிடத்திலிருந்த செல்வாக்கு வெகுவாக இழந்து வந்தது.ராசாம்பிள்ளை குடி,வெள்ளரசன் குடி,என்பன இன்று தமிழ்,முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுவதாகவும்,குடிகளின் வகைகளையும் அது முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவிய முறைகளையும் தெளிவாகவும்,ஆழமாகவும் ஆய்வினை முன்வைத்த ஆய்வாளரின் கருத்துக்கள் சபையோர்களைக் கவர்ந்தது.

பிரதேச செயலாளர் யூ.எல்.நியாஸ் உரையாற்றுகையில்,ஆய்வாளர்கள் தங்களது ஆய்வினை மிகச் சிறப்பாக முன்வைத்ததனை அவதானிக்க முடிந்தது.ஆனால்,நாட்டார் இலக்கிய பாடல்களுக்கு முஸ்லிம்கள் உரிமை கோர முடியாது.ஏனெனில் முஸ்லிம்களுக்கென தனித்துவமான இஸ்லாமிய இலக்கியம் இருக்கிறது.மற்றும் அவர்கள் மாத்திரம் கவி பாடினார்கள் என்பதனை முற்றாக மறுக்கிறேன்.நான் நேரடியாக சென்று கள ஆய்வினை மேற் கொண்ட போது இறக்காமத்தைச் சேர்ந்த மீரா உம்மா பாடியிருப்பதை என்னால் அறியமுடிந்தது.என்றார்.குடியானது ஒருவரை அந்தஸ்துப்படுத்தும்.அதன் மூலம் அவர், பெருமை,மமதை என்பன கொள்வதற்காகவோஅல்ல,மாறாக குலங்களாகவும்,கோத்திரங்களாகவும் தங்களை அடையாளப்படுத்துவதற்காகவே முஸ்லிம்கள் மத்தியில் குடிவழிப்பாரம்பரியம் காணப்படுகிறது.இருந்த போதும் இன்று கணிசமான முஸ்லிம்கள் மத்தியிலிருந்து அவை மறைந்து வருகிறது.என்றார் பிரதேசசெயலாளர் யூ.எல்.நியாஸ்....

இவ்வாறு ஆய்வுகளும்,அவதானங்களும் முடிவடைகின்ற போது நேரம் மூன்று மணியைத் தாண்டியிருந்தது.மிகவும் ஆழமாகவும்,சுவையாகவும்,காத்திரமாகவும் நகர்ந்து சென்ற ஆய்வில் சில குறைபாடுகளும் இருந்தன.நாட்டார் இலக்கியம் சம்பந்தமாக எஸ்.முத்துமீரான் ஆவேசப்பட்டதையும்,அங்கலாய்த்ததையும்,சிலரைக் குற்றம் சாட்டியதையும், அந்த இடத்தில் தவிர்த்திருக்கலாம்..அந்த ஆய்வரங்கிற்கு அழைக்கப்பட்டவர்களில் அநேகர் பிரதேச செயலகத்தில் பணியாற்றுபவர்கள்,இதனால் அட்டாளைச் சேனை பிரதேசத்திலே வளர்ந்து வரும் கலைஞர்களும்,இலக்கிய ஆர்வலர்களும் அங்கு அழைக்கப்படாமை பெரும் குறையாக இருந்தது.அவர்களையும் இனங்கண்டு ஏற்பாட்டுக் குழுவினர் அழைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.....
சிலர் வலிந்து  அழைக்கப்பட்டதைப் போன்று ஆய்வின் போது பின்வரிசையில் தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருந்தனர்.இன்னும் சிலர் கதிரையை விட்டு எழும்புவதும்,வெளியே போவதும்,வருவதுமாகவும் இருந்தனர்.ஆய்வுகளில் ஆர்வமுள்ளவர்களை கருத்தில்; கொண்டு  அழைப்புக்கள் கொடுக்கப்பட்டிருந்தால்,ஆய்வு காத்திரமாகயிருந்திருக்கும். மற்றும் அந் நிகழ்வினை ஒரு விடுமுறை தினத்தில் நடத்தியிருக்கலாம்.

எது எப்படியிருந்தாலும், இப்பிரதேசத்தில் பல வருடங்களுக்குப் பின்னர்,இது போன்ற கலாசார விழாவினை மிகச் சிரமப்பட்டு ஏற்பாடு செய்த பிரதேச செயலகம்,பிரதேச கலாசார பேரவை என்பவற்றை பாராட்டத்தான் வேண்டும்.கலைகளையும்,கலைஞர்களையும் ஊக்குவிப்பதற்காக இது போன்ற நிகழ்ச்சிகளை வருடா வருடம் நடத்த வேண்டும்.....

( இது,2007.12.16 ம்திகதி ஞாயிற்றுக்கிழமை தினகரன் பத்திரிகையில் வெளியான எனது கட்டுரை )


Tuesday, June 21, 2011

காற்றலையில் பேசிய கவிதை......

தாலி கட்டி உனக்கு விலங்கிடவில்லை...
தாலி கட்டி உனக்கு சிறகுகள் தந்திருக்கிறேன்....
தாராளமாய்...நீ..விரிக்கலாம்.....

******************
கண்ணீர் சிந்தினேன்...
அது மழையாகப் பொழிந்தது...
காதலை தூவினேன்..
அது நிலவாக குளிர்ந்தது.......

**************


நீ இரவுகளின் ஒளியா..
அல்லது என் வாழ்வின் அமாவாசையா....
நீ என் கனவுகளின் நினைவா...
அல்லது என் வாழ்வின் புகைப்படமா....
நீ  என் எதிர்காலத்தின் தோரணங்களா....
அல்லது என் இளமையின் ரணங்களா.....?

*********************
தீக்குச்சி பற்றிக்கொண்டால்,
காற்று அணைத்துவிடும்...
நம் பார்வை பற்றிக் கொண்டால்...,
யார்தான் உண்டு அணைப்பதற்கு......

**********************
அவதாரங்களையும்,தீர்க்கதரிசனங்களையும்..,
பெறுகிறவள் நீ.......
அவமானங்களையும்,தரித்திரங்களையும்...
பெறுகிறவன் நான்......

***********************
இமைகளால் மூடிக் கொள்ளும் விழிகளையும்..,
உதடுகளால் போர்த்திக் கொள்ளும் வார்த்தைகளையும்..,
மறைத்து வை.......
ஆனால்,உன் மனக்கதவை எனக்காக திறந்து வை.......

**********************
உன்னை தேடுகிறேன்....
எந்தத் தேசத்தில் இருக்கிறாய்...
நிரந்தரமில்லா பிரிவில் முகவரியை தொலைத்திருக்கிறாய்..
சிறகுகளை கட்டிக்கொண்டாவது உன்னை சேர்வேன்
அந்த நம்பிக்கையோடு நானிருக்கிறேன்......

**********************
கண்களை இறுக மூடிக்கொண்டாலும்...
காதலின் இறுக்கம்....
என் நெஞ்சுக்குள் சுடர்விட்டெரிகிறது...
அதை உன் மனமறியுமா...?

***********************
நீ வந்த போது..,
வாழ்வுக்காய் போராடிய மனம்..,
நீ போன பிறகு..,
வாழ்வு மரணத்திற்காய் போராடுகிறது.....

********************
கனவுகளை சுருட்டிக்கொண்டு..,
இரவுகள் விடிவதை விட..
நான் உன் விழிகளில் விழும் வரை..
விடியாத இரவுகளாகயிருக்கட்டும்.......

**********************
சந்தோஷங்களால் சங்கீதம் இசைக்கும் நீ....
உன்னை பார்க்கத் துடிக்கும்..
என் மனதின் சோகம்..
என் இசைத் தட்டுக்குள் ஒலிப்பதை உன் மனமறியுமா..?

**********************
நானும் நீயும்
வாழ்க்கைச் சமூத்திரத்தில்..,
கரையில் இருந்து நீச்சலடிக்கிறோம்..
பாவம்..,வாழ்க்கை எட்டாத தூரத்தில்..
உனக்கும் எனக்கும்.....
********************
அந்திப் பொழுதில்..,
நிழல்கள் நீள்வதைப் போல்..
நீயில்லாத இரவுகளில்...
உன் நினைவுகள் என்னுள் நீள்கிறது.....

*****************
நான் கரையில் நின்றழுது...
காதலைத் தேடினேன்....
நீயோ..,கடலில் குதித்தல்லவா.
காதலை நீக்க நினைக்கிறாய்.....

**********************
இரவுகளின் தாலாட்டில்...
உறவுகள் தூங்கியிருக்க...
அந்த இரவுகளிலும்..
நாம் முரண்பட்டுக் கொள்கிறோம்.......
******************
உன் இதயத்தை..,
பூந்தோட்டமாக வைத்திரு....
அதில் வண்டாக..,
நான் வருவேன்...காத்திரு......

********************

(...வசந்தநிலா நிகழ்ச்சியின் போது பாடல்களுக்கிடையில் நான் சொன்ன கவிதைகள் இவை..,
இரவுகளைத் தாலாட்டும் அந்த இரவுகளில் அதிகம் சோகப்பாடல் ஒலிபரப்புவதால். அதற்கான கவிதைகளும் சோகமானவைதான்...வாசித்துப்பாருங்கள்.....)

Monday, June 20, 2011

உனதான வழியில்.......

பாசம் காட்டத் தவறியதில்லை...
பாதை விலகும் போது கண்டிக்கத் தவறியதுமில்லை...
பிரியாமல் பலதை புரியவைத்தாய்..
பலர் போற்றும் வாழ்வை படிப்பித்தாய்....அதனால்,
பாசமுடன் நெஞ்சுக்குள் வைத்திருக்கிறோம் தந்தையே....!

பிஞ்சு நான் தின்னையில் தவழ்கையில்...,
அள்ளியெடுத்து உச்சிமோர்ந்து கொள்வாய்..
மிட்டாய்க்காய் அடம்பிடிக்கையில்...
மிரட்டாமல் வாங்கித் தருவாய்...
காற் சட்டையோடு ஓடி விளையாடும் போது..,
கவனமாய் பார்த்து நிற்பாய்...

ஏடுகள் படித்து வாழ்வில் உயர..,
ஏணிப்படியாய் இருந்தீர்கள்...
கை பிடித்து பள்ளிக்கு கூட்டிப்போனீர்கள்..,
விரல் பிடித்து எழுதப் பழக்கினீர்கள்...
நெறி தவறா வாழ்வைச் சொல்லித் தந்தீர்கள்....
ஐவேளை தொழுதிட பள்ளிவாசலுக்கும் அழைத்து போனீர்கள்...
எங்கள் வாழ்வில் வெற்றிபெற பாலமாய் இருந்தீர்கள்..
அதனால்..,பத்திரமாய் நெஞ்சுக்குள் வைத்திருக்கிறோம்...தந்தையே....
பண்புடன் நீங்கள் வாழ்வதால்..,
பாசத்தோடு பார்ப்போர் பலர்..
பண்பு தவறக்கூடாது என்பதற்காய்..
ஒழுக்கமாய் வாழப்பழக்கினீர்கள்..
அதனால்..அடக்கமாய் வாழக்கற்றுக்கொண்டோம்.....
வறுமை எங்களை சூழ்ந்த போது..,
எங்கள் வயிற்றை நிரப்பி.....,
உங்கள் வயிற்றை வெறுமையாக்கினீர்கள்..
எங்கள் கண்ணீரை துடைப்பதற்காய்....
நீங்கள் கஷ்டப்பட்டீர்கள்.....
நாங்கள் உருவாக வேண்டுமென்பதற்காய்...
நீங்கள் உருக்குலைந்தீர்கள்..
ஆக..,எங்கள் வாழ்வின் பொக்கிஷம் நீங்கள்தானே....

பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை..,
ஒளி விளக்காய்யிருந்த தந்தையே...
வயது போனதாய் நீங்கள் கவலைப்படக்கூடாது..
எங்கள் வீட்டில் நீங்கள்தான் பல்கலைக்கழகம்...
உங்கள் கனவுகளை நிஜமாக்கிப் பயணிப்போம்...
உங்கள் வழியில்...எங்கள் தந்தையே......

Wednesday, June 15, 2011

அடம் பிடித்தல்......

என்னை ஏற்றுக்கொள்ள,
ஏன் அடம் பிடிக்கிறாய்.....
என் உணர்வுகளை புரியாமல்,
ஏன் விலகிப்போகிறாய்.....

நான் உன்னை நினைக்கத் தவறினால்,
நீ என்னை மறக்க நினைக்கிறாய்...
காரணம் கேட்டால்,
தீவிரவாதியைப்போல் முறைத்துப்பார்க்கிறாய்....
நீ கண்ணீரை என் மீது வீசுவாய்..
நான் புன்னகையை உன் மீது தூவுவேன்...
என்னை உதடு கடித்து முறைத்துப்பார்ப்பாய்..
அப்போது அப்பாவியாய் நகர்ந்து செல்வேன்...
என்னை உனக்கு உரத்துச் சொல்லும் போது....
நீ மௌனமாய் பயணிக்கிறாய்..


நான் உனக்கு காதல் மொழிகளால் தேனூற்றும் போது..
நீ என்னை மொழிகளால் காயப்படுத்துகிறாய்....
நான் உன்னை நேசிக்கும் போது...
நீ என்னை வெறுக்கிறாய்...
காலம் கடந்து நான் இன்னுமொருவரால் நேசிக்கப்படுவேன்..
நீ அப்போது என்னால் வெறுக்கப்பட்டிருப்பாய்....

என்னை புரிந்து கொள்ளாமலும்
ஏற்றுக் கொள்ளத் தெரியாமலும்..விலகிப் போகிறாய்..
எனக்கான காலம் வரும்..
அப்போது இன்னு மொருவரால் நேசிக்கப்படுவேன்..
உன்னை ஏற்றுக் கொள்ள முடியாமல்...
நான் தூர நிற்பேன்.....

Monday, June 13, 2011

நமதான காதல்..........

உதடுகளுக்கு தாழ்ப்பாளிட்டு.....
வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு.....
விழிகளின் மொழி கொண்டு...
மௌனமாய் நகர்கிறது......
நமதான காதல்.........

 புரிந்து கொள்ள முடியாத......
இதயங்களின் மொழியால்..
இரகசிய தூதுவிடுகிறோம்....நானும்,நீயும்....
அதனால் மனசுக்குள்ளேயே அடங்கிப்போகிறது..
நமதான காதல்.....யாருக்கும் தெரியாமல்....

யார் யாரோ....வருவர்,
ஆனால் நீ வர மாட்டாய்...
காலடிச் சத்தங்களில்..உன்னைத் தேடுவேன்..
அது நீயாக இருக்கமாட்டாய்....அப்போது
மலையளவு பூத்த கனவு....
மேகங்களாய் கலைந்து போகும்........விரல்கள் தொடாத....புல்லாங்குழலில்......
இராகமாகவே எனக்குள் விழுகிறாய்......
உனக்கான பாடல் என்னிடமிருக்கிறது...
புல்லாங்குழல் உன்னிடமிருக்கிறது.......
ஆனால்,வார்த்தைகளுக்கு தாப்பாளிட்டு....
மௌனமாய்..இரவு நீள்கிறது.....
யாருக்கும் தெரியாமல்....
நமதான காதல்..மனசுக்குள்ளேயே அடங்கிப்போகிறது........

Thursday, June 9, 2011

கவிஞர் பொத்துவில் அஸ்மின்,நஜ்முல்ஹூசைனுக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி பாராட்டு...........


இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிதைபாடி,நம் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த கவிஞர்களான என்.எம்.நஜ்முல்ஹீசைன்,பொத்துவில் யு.எல்.எம்.அஸ்மின்.இந்த இரண்டு கவிஞர்களையும்.அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி,08.06.2011 புதன்கிழமை பாராட்டி கௌரவித்தது.....

விழாவில் பாராட்டப்பட்ட கவிஞர் நண்பர் அஸ்மினின் அழைப்பை ஏற்று மருதானையிலிருந்து நானும் அவரும் அன்று மாலை பஸ்வண்டியில் விழா இடம்பெறவிருக்கும் எல்பிட்டிகலபிளட்ஸை நோக்கி பயணித்தோம்,அங்கு கதிரைகள் வெற்றிடமாகயிருந்தது.குறிப்பிட்ட சிலர் வந்திருந்தார்கள்.அப்போது நிகழ்வு ஆரம்பமாகவுமில்லை.அகில் இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாஸ் தலமையில் மாலை 07.00 மணியளவில்  கவிஞர்களுக்கான பாராட்டு விழா ஆரம்பமானது.அந்தநேரம் மண்டபம் நிறைந்த இலக்கிய ஆர்வலர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.விழாவின் ஆரம்ப உரையை அதன் முன்னாள் தலைவரும்,முஸ்லீம்மீடியாபோரத்தின் தலைவரும்,நவமணிபத்திரிகையின்பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் நிகழ்த்தினார்.அவரது உரையில்,மலேசிய மாநாட்டில் கவிதைபாடி எங்களுக்கு பெருமை சேர்த்துதந்த இரண்டு கவிஞர்களையும் சிலாகித்துப்பேசியிருந்தார்.அதேநேரம் மாநாட்டில் அறிவிப்புச்செய்து,அரங்கை அதிர வைத்த நமது அறிவிப்பாளர்களான வீ.எச்.அப்துல்ஹமீத்,புர்கான் வீ இப்திகார்.ஆகியோரையும் நினைவுபடுத்தினார்.அதனைத்தொடர்ந்து தினக்குரல் பத்திரிகையைச் சேர்ந்த ஏ.எம்.நிலாம் உரையாற்றினார்.

நிகழ்வில் வாழ்த்து கவிதைபாட அழைக்கப்பட்ட கவிஞர் நாகூர்கனி கவிதைபாடிக்கொண்டிருக்கும்போதே,கவிமாலை பொழிவதை விட,பூமாலை சூடி அலங்கரிக்கப் போகிறேன் என்று கூறி,தான் கொண்டு வந்த பூ மாலையை நம்ம கவிஞர்கள் இரண்டு பேருக்கும் அணிவித்து மகிழ்ந்தார்.அதனைத்தொடர்ந்து மலேசிய மாநாட்டுக்கான இலங்கைக்குழுவுக்கு தலமை வகித்த கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் உரை நிகழ்த்தினார்.கவிஞர்களின் அதி திறமைகளை சுட்டிக்காட்டியதோடு,இலங்கைக்குழுவின் மலேசியப்பயணம் என்ற தலைப்பில் தனியாக உரையாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.அதற்காக நாங்களும் காத்திருக்கின்றோம்.இவர் சுகயீனமுற்றிருந்த போதிலும் விழாவுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதனைத் தொடர்ந்து மலேசிய மாநாட்டில் கவிதைபாடி கலக்கிய வயதில் இளைய கவிஞரான பொத்துவில் கவிஞர் யூ.எல்.எம்.அஸ்மின் அங்கு பாடிய கவிதையை பாடி அரங்கு நிறைந் கரகோஷத்தினைகப் பெற்றிருந்தார். அதேபோல் நமது மூத்த கவிஞரான என்.எம்.நஜ்முல்ஹீசைன்  அவரும் அங்கு பாடிய கவிதையைப் பாடி அரங்கு நிறைந்த கரகோஷத்தினைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து எங்கள் தேசம் பத்திரிகையின் பசீர் அலி அந்தப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் சிறு பகுதியை வாசித்துக்காட்டினார்.அதில் அவர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் என்னை மிகவும் கவர்ந்தது.அதாகப்பட்டது,அங்கு மேடையில் வீற்றிருந்த பெரும் கவிஞர்களை நமது கவிஞர்கள் கிளின்ட் வோல்ட் செய்து அசத்தினார்கள் என்பது........

பாராளுமன்ற உறுப்பினரான அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் உரை நிகழ்த்தினார்.அவரது அற்புதமான உரையினை அழகாக நிகழ்த்தினார். அந்த  மாநாட்டில் கவிஞர்களின் கவிதையினை ரசித்த விதத்தினையும் தெளிவுபடுத்தியிருந்தார்.பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் அங்கு உரை நிகழ்த்துகையில் தான் இலக்கியத்தில் சிறு வயதிலிருந்து ஆர்வம் உள்ளதால்,கவிதையை ஓரளவு மதிப்பிடமுடியும்.ஆக அந்த அரங்கில் கவிதை பாடிக் கொண்டிருக்கும் கவிதைகளை மதிப்பிட்டுக் கொண்டிருக்கும் போது  நமது கவிஞர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்  என்று மனதிற்குள் பகை,பகைத்துக் கொண்டிருக்கும் போது கவிஞர் நஜ்முல் ஹுசைன்,கவிதை பாட வந்தவர்   அரங்கை கவிதைகளால் கவர்ந்திழுத்தர் எனக் குறிப்பிட்டார்.அதனைத் தொடர்ந்து கவிதை பாட வந்த நமது இளம் கவிஞர் அஸ்மின் மிகச்சிறந்த மரபுக் கவிதையினை வாசித்து  அரங்கை தன் பக்கம் கவர்ந்திழுத்தர்.இதனால் தான் மிகவும் சந்தோசப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

விழாவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதி அமைச்சர் ரஊப் ஹக்கீம் அழைக்கப்பட்டும் அமைச்சரவைக் கூட்டம் இருந்தமையால் அவரால் வர முடியவில்லை,அந்நக்கட்சியைச்சேர்ந்த செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹசன்அலி,பிரதியமைச்சர் பசீர்சேகுதாவுத்,ஆகியோர் வருகை தந்திருந்தனர்.பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர்,புரவலர் ஹாசீம் உமர்,அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அங்கத்தவர்கள் என முன்னாள் அமர்ந்திருந்தனர்.விழா அரங்கில் நான்கு பெண்கள் கலந்து கொண்டமையையும் அவதானிக்க முடிந்தது......

இறுதியாக மலேசியா மாநாட்டில் கவிதைபாடிய நமது கவிஞர்களான என்.எம்.நஜ்முல்ஹீசைன்,யூ.எல்.எம்.அஸ்மின் ஆகியோருக்கு புரவலர் ஹாசீம்உமரினால்.பொன்னாடை போர்த்தி,பாராட்டுச்சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்தப்பட்டு,அங்குவந்திருந்த இலக்கியவாதிகள்,ஆர்வலர்கள்,அதிதிகள் எல்லோரும் கைகுலுக்கி வாழ்த்துச்சொல்லி அங்கிருந்து விடைபெற்றனர்.நானும் சந்தோஷம் தரும் நிகழ்வில் கலந்து கொண்ட மகிழ்ச்சியோடு வீடேகினேன்..........

Monday, June 6, 2011

சிதையும் நினைவுகள்.......


தெரியாதவர்களாய்
கடந்து போகிறோம் தெருவோரம்
நானும் நீயும்.....
தியாகங்கள் செய்து காதலித்த நமது காதல்
யாரோ ஒரு வழிப் போக்கனால் கத்தரிக்கப்பட
காதல் அநாதையாய் அலைகிறது...ஞாபகமிருக்கிறதா...?
பள்ளிக்கூட பலாமரத்தடியில்
காதல் கடிதங்கள் பரிமாறியது...
காதல் கடிதங்கள் மீதமிருக்க..
நானும் நீயும்
யாரோ ஒருவனால் முகவரி தொலைக்கப்பட்டிருக்கிறோம்..
பாவம்..பள்ளிக்கூடமும்,பலாமரமும்.......

வயிற்று வலியால்....
வகுப்புக்கு வராத போது
துடி துடித்துப் போனேன்...
என்னை நீ ஆசுவாசப்படுத்தினாய்..
இப்போது நீ இடுப்பு வலியால் துடிக்கிறாய்..
உன்னை யார் ஆறுதல்படுத்துவார்......

சத்தியம் செய்து
நமது காதல் ஒப்பந்தமானது
அப்படித்தான் அந்த நாட்களும் நகர்ந்தது..
ஆனால்,எவனோ ஒருவன் இன்று கிழித்து வீசியுள்ளான்
நமது காதலை.......

நீண் இடவெளிக்குப் பின்னர்
நானும் நீயும் சந்தித்தோம்..
விழிகள் பேசத்துடித்தது....
ஆனால்,தூரத்து உறவுகளைப் போல் பிரிந்து போனோம்...
யாரோ ஒருவனின் சூழ்ச்சி பலித்திருக்கிறது....

Thursday, June 2, 2011

உன்னைத் தேடி .......


உன்னைத் தேடி அலையும்
பயணம் நீள்கிறது..
உன் அன்பை நேசிக்கும்
என் இதயம் வாடுகிறது................

வெயில் ஊற்றும் நீரில்
என் மேனி நனைகிறது........
உன் தெருவோர வெக்கையில்
என் பாதம் கொப்பளிக்கிறது.........

அன்பை யாசிக்கும்,
பிச்சைப் பாத்திரமாய் நான்....
உன் வாசற் படியோரம்.....
கட்டி வைத்த நாயை
எட்டி ஓட வைத்து வேடிக்கை பார்க்கும்
எஜமானியாய் நீ...


இரும்புச் சங்கிலியாய்
இருக்க வேண்டிய நமது காதல்
காகிதச் சங்கிலியாய் தேய்ந்து போகிறது..
பாவம்...நமது காதல் காற்றடித்தால் அறுந்து போகும்...


உன்னை நேசிப்பதில்
என் சுயத்தை இழக்கிறேன்..
என்னை பித்தனாக்கி
என் நிழலில் உன்னை தேடுகிறேன்...
ஆனால் நீயோ.....!
ஒட்டி வரும் நமது உறவை
புறங் கையால் எட்டி தள்ளுகிறாய்...........