Thursday, May 3, 2012

உன் கண்ணால் தூங்கிக்கொள்கிறேன்


மனம் வேர்த்துப் புழுங்கிய நேரம்,இளைப்பாற ஏதாவது கிடைக்குமா என்று வானொலியில் தேடினேன்.முள்ளின் நடையில் ஹைதராபாத் இடறியது.உருதுக் கவியரங்கம் “தில் அன்மோல்தா” (இதயம் விலை மதிப்பற்றதாக இருந்தது) என்ற சொற்கள் என்னை பிடித்து நிறுத்தின.வசியம் செய்யப்பட்டவன் போல சொற்களின் பின்னால் நடக்கத் தொடங்கி விட்டேன்.கவிதை தொடர்ந்தது…


  இதயம்
  விலை மதிப்பற்றதாக இருந்தது
  இப்போதோ அதற்கு
  ஒரு விலையும் இல்லை

என்ற கஜலின் முதலடியைப் பாடி விட்டுக் கவிஞர் நிறுத்திக் கொண்டார். ஏன் அப்படி என்று ஆர்வம் குடைந்தது. கஜலின் கவர்ச்சியே இந்த உத்தியில்தான்,கவிஞர் மீண்டும் முதலடியைப் பாடினார்.ஆர்வம் அதிகரித்தது.பிறகு அடுத்த அடியை பாடி முடித்தர்.

  வாங்கிய ஒருத்தி
  திருப்பிக் கொடுத்துவிட்டுப்
  போய்விட்டாள்!

அடடா!என்ன பரிதாபமான வியாபாரம்.திருப்பிக் கொடுத்து விட்டுப் போனவள் மீது கோபம் பொங்குகிறது.ஒன்பதாயிரம் இதயமா இருக்கிறது? ஒன்றில் நஷ்டமானால் மற்றொன்றில் சம்பாதித்து விடலாம் என்று நினைப்பதற்கு?விலை கொடுத்தா வாங்கி இருப்பாள்.இருக்காது அதுதான் விலை மதிப்பற்றதாயிற்றே! இதயப் பண்டமாற்றுச் செய்திருப்பாள்.அல்லது இந்த பைத்தியக்காரர் சும்மாவே தூக்கிக் கொடுத்திருப்பார்.ஒரு வகையில் ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.உடைத்து தராமல் முழுமையாகவே கொடுத்திருக்கிறாளே!இன்னொரு வகையில் யோசித்துப் பார்த்தால்,இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.முழமையாக இருந்து மட்டும் என்ன பயன்?மதிப்பே போய் விட்டதே!முன்னாலும் விலை மதிப்பில்லை,இப்போதும் விலை மதிப்பில்லை!ஓ! எத்தனை பேரிடத்தில் இப்படி இதயங்கள் மூலையில் கிடக்கின்றனவோ?

மற்றொரு கவிஞர்..
  நான் ஏழைதான் ஆனால்
  வள்ளலாகவும் இருந்தேன்


என்று ஆரம்பித்தார்,காதலியைப் பார்த்துத்தான்.என்ன அப்படி வழங்கியிருப்பார்?அந்தக் கவிஞராவது விலை மதிப்பற்ற இதயத்தை வைத்திருந்தார்.அவர் தொடர்ந்தார்…

  நீ ஒன்றுமே இல்லை
  உனக்காக நான்
  பிரார்த்தனைகள் தந்தேன்.

ஏழ்மையிலும் கொடுக்க முடிந்ததற்காக நிமிர்ந்து நிற்கும் அவருடைய அழகான கர்வம் எவ்வளவு இனிமையானது!அவருக்கு முன்னால் அவள்தான் எவ்வளவு சிறுத்து போய் நிற்கிறாள்!

  மக்களின் சொத்தை
  அடித்துப் பிடுங்காதீர்கள்


என்று ஆரம்பித்தார்,ஏஜாஸ், அடடா!என்ன நேர்மை என்று வியந்தேன்.ஏதாவது நீதி போதனையே என்று பயமாகவும் இருந்தது.மனிதர் மகா குறும்புக்காரர் அடுத்து என்ன சொன்னார் தெரியும்h?

  பேசாமல்
  மருமகனாகி விடுங்கள்
  எல்லாச் சொத்தும்
  உங்களிடம் வந்து விடும்


வெறும் நகைச்சுவையா இது?நாட்டில் இன்று பகிரங்கமாக நடக்கும் கொள்ளைதானே இது?அதுவும் மாப்பிள்ளை என்ற முகமூடியில்!

பழைய தமிழில் காதலைத்தான் ‘களவு’என்பார்கள்.இப்போது கல்யாணத்தைதான் ‘களவு’ என்று சொல்ல வேண்டும்.பாவிகள் தமிழையே மாற்றி விட்டார்களே!அதுவும் எப்படிப்பட்ட களவு?பெண்ணின் கன்னத்தில்‘கன்னம்’ வைத்து அப்பன் சொத்தைக் களவாடுவது.

நூர் என்ற கவிஞர் வாழ்க்கையிடம் பரிதாபமாகக் கெஞ்சிக் கொண்டிருந்தர்.

  வாழ்க்கையே!
  உன் முகவரி  தேவை
எதற்காக?

  உன்னைப் பிரிந்தால்
  மறுபடியும்
  எப்படிச் சந்திப்பேன்?


என்று தம் ஆற்றாமையைப் புலம்பிக் கொண்டிருந்தர்

  வாழ்க்கையே
  உன் முகவரி தேவை

எத்தனை ஆழமான வரிகள்!வாழ்க்கையின் முகவரி கிடைப்பது எத்தனை கடினமான காரியம்?யார் யாரோ இதுதான் வாழ்க்கையின் முகவரி என்று தருகிறார்கள்,தேடிப் போய் பார்த்தால்தான் தெரிகிறது,அங்கே வாழ்க்கை இல்லையென்று.நம்முடைய எத்தனை கடிதங்கள் திரும்பி வந்திருக்கின்றன முகரியாளர் இல்லை என்று! எத்தனை பேர் வாழ்க்கையைத் தேடுவதிலேயே ஆயளைச் செலவழித்து விடுகிறார்கள்!

கவிஞர் அதிர்ஷ்டசாலி,என்றைக்கோ வாழ்க்கையை எதிர்ப்பட்டிருக்கிறார்.பிரிந்துவிடுவோம் என்ற பயம் உடனே வந்திருக்கிறது.புத்திசாலி வாழ்க்கையிடமே அதன் முகவரியைக் கேட்கிறார்.இதிலிருந்தே தெரிகிறது அவர் வாழ்க்கையை எங்கோ வழியில் சந்தித்திருக்கிறார் என்பது,இந்த வாய்ப்புக் கூட நம்மில் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கிறது?

அதே கவிஞரின் சிந்தனையிலிருந்து மற்றொரு கிரணம் பாய்ந்தது.

  என் வீடு இடிந்தாலென்ன
  உன் வீடு இடிந்தாலென்ன


என்று தொடங்கினார்.இதயம் படபடத்தது அடுத்துச் சொன்னார்
  
புயலுக்கோ பாதை தேவை

ஈவிரக்கமற்ற இயற்கையின் விதி;யை எவ்வளவு அற்புதமாகச் சொல்லிவிட்டார்.புயல் மட்டும்தானா இப்படி?நம்முடைய சமூகத்தில்தான் எத்தனை வகைப் புயல்கள் இவற்றின் பாதைக்காக எத்தனை பேருடைய வாழ்க்கைகள் இடிக்கப்பட்டு விடுகின்றன?

நூர் என்றால் ஒளி என்று பொருள்.கவிஞரின் புனைப் பெயர் நூர் அதை வைத்தே அவர் விளையாடினார்.

  ஒவ்வொரு விளக்கிற்கும்
  ஒளி தேவை
  இப்போதோ “ஒளி”க்கும்
  ஒரு விளக்கு
  தேவைப்படுகிறது!


விளையாட்டா இது?வினையாட்டு! எவ்வளவு பெரிய சக்திக்கும் ஆதாரம் ஒன்று தேவைப்படுகிறதே!கவிஞர் நம்முடைய நிலையையும் அல்லவா இதில் வெளிப்படுத்திவிடுகிறார். அவர் ‘ஒள’தான் இருந்தாலும் அவரையும் தாங்கிக் கொண்டு நிற்க வாய்ப்பு,வசதி வேண்டியிருக்கிறதே.இவை இல்லாமல் எத்தனை ‘ஒளி’கள் ஏற்றப்படாமலே போயிருக்கின்றன!

‘இனாயதீ’என்ற கவிஞர்

  நானோ அவளுக்கு
  தினந் தோறும் கடிதம் எழுதுகிறேன்


என்று தொடங்கினார்.

  பேனா இல்லை
  காகிதம் இல்லை
  மை இல்லை


எவ்வளவு அழகான கடிதம்,எழுதப்பட்ட காதல் கடிதத்தை விட எழுதப்படாத கடிதம்தான் அழகானது.அப்படியே எழுத நினைத்தாலும் எழுதி விட முடியுமா? வலைக்குள் மீன் சிக்கும்,தண்ணீர் சிக்குமா?

‘இனாயதீ’ மீண்டும் தொடர்ந்தார்.

  உன் கண்கள்
  என் கண்கள் இல்லையா


என்று காதலியைப் பார்த்து கேட்டார்.எதற்காக இவ்வளவு அழகாக கேட்கிறார் என்று துடித்தேன்.

உன் கண்ணால்
கொஞ்சம்
தூங்கிக் கொள்கிறேன்


என்று அவர் முடித்த போது என்னால் தாள முடியவில்லை.வானொலியை நிறுத்தினேன்.தூங்குவதற்காகக் கண்களைத் தேடினேன்.

(..கவிக்கோ அப்துல் ரகுமானின் “அவளுக்கு நிலா என்று பெயர்”; நூலில் நான் லயித்துப் போய் காதலாய் மேய்ந்ததை என் வலைப் பூவில் பகிர்ந்து கொள்கிறேன்..)

1 comment:

  1. அருமை...! நீங்கள் மேய்த சத்தான சுவையான கவிப்புற்களை அசைபோட்டு பாலாகத்தரும் பசுப்போல் எம்முடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி !

    ReplyDelete