Sunday, August 7, 2011

எப்படியானாலும்...நீ...



உன்னை சந்திப்பதற்கு
உன் தெருவுக்கு வருவேன்
நீ வரவேமாட்டாய்...
உன்னைக்காணாத அந்த நிமிடம்
தவிப்புக்களால் கரைந்துபோகும்....
இப்போது என்னை பார்க்க தினமும் தவிக்கிறாய்.
முன்னரைப்போல்
உன் தெருவுக்கு இப்போது என்னால் வரமுடியாது....
காலமும்,என் தொழிழும் உன்னை, என்னிடமிருந்து
பிரித்து வைத்திருக்கிறது.........



உன்னோடு பேசமுடியாவிட்டாலும்...,
உனதான ஞாபகங்கள்
என் மனசுக்குள் மௌனமாயிருக்கிறது...
உன் மௌனம் என்னை கவிதை எழுத வைத்தது..
என் மௌனம் உன்னை தனிமைப்படுத்தியது..
நான் உன் தெருவுக்கு வராவிட்டாலும்
உன்னோடு பேசமுடியாவிட்டாலும்
நீ உனக்கான பாதையிலும்
நான் எனக்கான பாதையிலும்
மௌனமாய் பயணிப்போம்......


உன்னிடம் பகிர
என் மனசில் ஆயிரமாயிரம்
கதைகளிருக்கிறது.....
அவை செல்லாக்காசாகிப்போகுமோ என்று
என் மனசு பதை பதைப்பதுமுண்டு......
நீ அந்தக் கரையிலும்
நான் இந்தக் கரையிலும் நிற்கிறோம்..
ஒருவரையொருவர் கடக்க முடியாமலும் தவிக்கிறோம்....




நான் உன் தெருவில் அலைந்த போது
என் பெறுமதி உனக்கு தெரியவில்லை
இப்போது என்னை பலர் பாராட்டும் போது
நான் உன் பக்கம் இருக்க வேண்டுமென விரும்புகிறாய்..
உன் பக்கம் என்னால் வரமுடியாவிட்டாலும்
உன்னை அவ்வப்போது நினைத்துக்கொண்டுதானிருக்கிறேன்......



Monday, July 25, 2011

காத்திருந்த காதல்


சித்தீக்கின் மூத்த மாமாவின் மகள்தான் ஷாமிலா.அவள் தனதூரிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றில் படித்துக்கொண்டிருந்தாள்.ஷாமிலா அவளது தாய் தந்தைக்கு கடைக்குட்டி,இதனால் அவள் வீட்டில் செல்லப்பிள்ளையாகவே வளர்ந்தாள்.இருந்தாலும் ஆன்மீகத்தில் அதிகம் பற்றுள்ளவள்,அழகானவள்,அன்பானவள்,இவள் விழிகளை உருட்டி,உருட்டி பேசும் போது கண்களை பார்த்துக் கொண்டு,வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.அவளது பண்புள்ள குணத்திலும்,அழகிலும் மயங்கிய சித்தீக்,அவள் மீது காதல் கொண்டான்...

ஷாமீலா மனைவியாக எனக்கு கிடைத்துவிட்டால்,என்னை விட அதிஷ்டாசாலி வேறு யாரு இருக்கமுடியும்,காலமெல்லாம் இவளை கண்கலங்காமல் காப்பேன்.வண்ண வண்ண சாரி உடுத்து அலங்கரிப்பேன்.இவ்வாறு கற்பனைகள் கலந்த கனவுகள் அவனுக்குள் முளைவிடத் தொடங்கியது. காலம் செல்லச் செல்ல,சித்தீக் காதல் பித்தனாக மாறினான்.தனக்குள் ஏற்பட்ட காதல் உணர்வுகளை அவளைக் காணும் போதெல்லாம் அங்க அசைவுகள் மூலம் வெளிபபடுத்துவான்.ஆனால் ஷாமீலா கண்டும் காணாமலும் போவாள்.இப்படி போகும் அவள் ஒரு வேளை என்னை விரும்பாவிட்டால்,.எந்நிலை என்னாகும். என்ற அச்சம் கலந்த சந்தேகம் அவனுக்குள் சதாவும் எழத்தொடங்கியது.இனிமேல் தனது காதலை தாமதப்படுத்தக்கூடாது என்று எண்ணிய அவன் நேரடியாக அவளது வீட்டுக்குச் சென்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினான்....ஷாமீலா,சித்தீக்கின் உணர்வுகளை புரிந்து கொண்டாலும்,அவளால் காதலிக்கத்தான் முடியவில்லை,வீட்டில் தான் கடைசிப்பிள்ளை.என் தாய் என்னை படிக்க வைத்து பெரியாளாக்கி பார்க்க ஆசையாகயிருக்கிறார்.அதனை தான் நிறைவேற்ற வேண்டும்,படிக்கும் போது காதல் வந்தால் எப்படி படிக்கமுடியும்,அப்புறமா பார்ப்போம் என்று அவனது காதலை நிராகரித்தாள் ஷாமீலா...

ஆனால், சித்தீக் அவளை விட வில்லை,அவள்தான் அவனுக்கு உலகமே காலப்போக்கில் அவள் கிடைக்காவிட்டால்,நான் எப்படி வாழ்வேன்.அவளில்லாத வாழ்க்கையை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.அவளை ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து உருக்குலைந்து போனான்...இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டது அவன் அந்த இடவெளிக்குள் அவளுக்கு 50 கடிதங்கள் அனுப்பியிருந்தான்.ஆனால் அவளோ ஒரு கடிதம் கூட அனுப்பவில்லை.இதனால் அவன் மனம் நொந்து போனான்....


அவளது மனதில் என் காதலை எப்படி புரிய வைப்பது.சரி இன்னொரு தடவை அவளது வீட்டுக்குச் சென்று தன் காதலை புரியமளவுக்குச் சொல்லிப்பார்ப்போம் என்று எண்ணிய அவன் தனது துவிச்சக்கர வண்டியை மிதித்துக் கொண்டு அவளது வீட்டுக்குப் புறப்பட்டான்.எதிபாராமல் வந்து நிற்கும் சித்தீக்கை கண்டதும் ஷாமீலா திடுக்கிட்டாள்.கதிரையில் உட்கார்ந்திருந்தவள் எழுந்து வந்து,என்ன திடீரென இந்தப் பக்கம்,நான் தானே சொன்னேன் காதலிப்பதில்லை என்று, மீண்டும் மீண்டும் என் பின்னால் வராதே என்றாள்.அதற்கவன், ஷாமீலா கொஞ்சம் பொறுங்க,இஞ்சப் பாருங்க உங்க நிலமையை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.ஆனா என்னுடைய நிலமையை நீங்க புரியனும் அதற்காகத்தான் வந்தேன்.என்று ஆரம்பித்தவன்.....
வானம் பூமியை காதலிக்கிறது,சூரியனை சூரிய காந்தி காதலிக்கிறது,தென்னங் கீற்றுக்களை தென்றல் காதலிக்கிறது,வண்டு பூவை காதலிக்கிறது,மிருகத்தனமாய் வாழ்ந்தவர்களை காதல் நல்ல மனிதர்களாய் மாற்றியிருக்கிறது..இப்படியிருக்கும் போது உன்னை நினைத்து உருக்குலைந்து போயிருக்கும் என்னை நீதான் சரிப்படுத்தவேண்டும்.பீளிஸ் என் காதலை ஏற்றுக் கொள்ளுங்க,இல்லாவிட்டால் என்னைக் கொல்லுங்க என்றான்....சித்தீக் மூச்சு வாங்கி வாங்கி பேசுக்கொண்டிருந்ததை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஷாமீலா,அவனது கன்னத்தில் அறைவதைப் போல் திடீரென சொன்னாள் தயவு செய்து வீட்டை விட்டு போங்க,எனக்கு உங்கள புடிக்கல்ல.. ஒரு நிமஷம்கூட இங்க இருக்க வேணாம் என்றாள். இதைக் கேட்ட அவன் இடி விழுந்ததாய் அதிர்ந்து போனான்,இனியும் அந்த இடத்தில் நிற்கக்கூடாது வேகமாக துவிச்சக்கரவண்டியை மிதித்துக் கொண்டு தனது வீட்டைச் சென்றடைந்தான்.

வீட்டில் இருக்கும் கட்டிலில் தூங்கியவாறு யோசிக்கிறான்.சித்தீக்கின்
நினைவுகள் முழுவதும் ஷாமீலாதான் வருகிறாள்.எப்போதாவது அவள் தனக்கு கிடைப்பாள் என்ற எண்ணத்தில் மனதை திருப்திப்படுத்திக்கொள்வான்.இப்படியாக அவனது நினைவுகளும்,திருப்திப்படுத்தலும் நகர, காலங்கள் வேகமாய் உருண்டோடியது அவள் பல்கலைக்கழகத்தில் இப்போது படிக்கிறாள் பல்கலைக்கழகம் சென்றவள் அங்கு சக பல்கலைக்கழக நண்பனை காதலிக்கலானாள்.இந்த விடயத்தை தெரிந்து கொண்ட சித்தீக்கின் இதயம் ஒரு கணம் நின்றுபோனது.....அவனை அவனாலேயே நம்ப முடியவில்லை,ஏங்கி ஏங்கி அழுதான்,ஆம், அவன் யாருக்காக ஏங்கித்தவித்தானோ,எந்தக் காதலுக்காக காத்திருந்தானோ அந்தக் காதல் அவனிடமிருந்து நழுவிப்போய் விட்டது.
அவனுக்கு அந்தக் காதல் கொடுத்த துன்பம் கடல் அலையைப்போல் தொடர்ந்தது.அதனால் பாதிக்கப்பட்ட சித்தீக்,ஏனோ தானோ என வாழ்ந்தான்,ஒழுங்காக உடுத்துக்கொள்வதில்லை போதைக்கு தன்னை அடிமையாக்கினான்.இதனால் அவனது வாழ்வு சீரழிந்து போனது...........

( இந்த சிறு கதை நான் உயர்தரம் படிக்கின்றபோது எழுதியது )


Sunday, July 10, 2011

நீ இல்லாத போது........

நீ இல்லாத இரவு..
கனவுகளுடன் போராடி..
தோற்றுப் போகிறது...
உன் முகம் காணும் ஆவலில்..
பொழுது விடிகிறது..........

உன்னோடு வாழ்வதாய்...
கற்பனையில் மிதந்து..
மனசு இறக்கை கட்டி பறக்கிறது...
உன் பெயர் சொல்லலும்...
உன் முகம் நினைத்தலுமாய்...
காலங்கள் நகர்கிறது...
காலம் சுமந்த வலியாய்...
உன் நினைவுள் இருக்குமென...
மனசு நோகுகிறது...

உன் ஞாபகம் வரும் போதெல்லாம்...
உன் தெருவுக்கு வருவேன்...
நீயிருக்கமாட்டாய்...
நீ எட்டிப்பார்க்கும்  ஜன்னல் பூட்டப்பட்டிருக்கும்...
நீ இல்லாத சோகத்தில்...
மனசு வெறுமையாகிப் போகும்....
முகவரி தர மறந்து...நீ எந்த தேசத்தில் வசிக்கிறாய்......

நீ எனக்குள் காதல் மொழி பேசிய போது...
வாழ்க்கை அர்த்தப்பட்டதாய் உணர்ந்தேன்...
நீ விலகிய போது...
வாழ்க்கை வெறுத்துப் போனது...
உன்னோடு கை கோர்த்து....
ஆனந்தமாய் கழித்த நாட்கள்...
இப்போது அழுது கழிகிறது....

இப்போது நீ...
என்னை மறந்து...
என் காதலை தூரமாக்கி...
இன்னுமொருவருடன் சுகமாய் வாழலாம்...
நான் உன் நினைவுகளை சுமந்து....
போராடி..போராடி..தோற்றுப் போகலாம்........


ஒரு நாள் வரும்...
அப்போது என் நினைவு உனக்கு வரும்...
நீ என்னைத் தேடி வருவாய்....
அப்போது உனக்காய்  தூக்கம் தொலைத்த விழிகளும்...
என் கண்ணீரை தாங்கிய தலையணையும்...
சாட்சி சொல்லும்...........

Saturday, July 9, 2011

சொல்ல மறந்த கதை......


சூரியன் நடு உச்சிக்கு வந்து வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் மதிய நேரம் அது...புலுக்கம் அதிகமானதால்.என் உடல் முழுவதையும் வியர்வை நனைத்துக்கொண்டிருந்தது.அதிலிருந்து மீள்வதற்கு என் வீட்டுப்பக்கம் இருக்கும் ஆற்றுப்பக்கம் போனேன்.என் அம்மாவின் அப்பா  நட்டு வைத்த  தென்னை மரம் ஆற்றுப்பக்கமாய் சாய்ந்து கிடக்கிறது.சட்டையைக் கழற்றி புற் தரையில் வீசிவிட்டு,அந்த தென்னை மரத்தில் சாய்ந்து கொண்டேன்.நன்றாக வீசிக்கொண்டிருக்கும் காற்று, ஆற்று நீரில் மிதந்து வர, என் உடம்புக்கு குளு குளு என்று இருந்தது.உடல் களைப்பும்,கவலையும் மறந்து தூக்கம் கண்களை தழுவிக் கொண்டிருக்கையில்,என் அம்மாவின் அப்பா என் ஞாபகத்திற்குள் வருகிறார்.என் சிறு வயதில் மிட்டாய் வாங்கித் தந்து,துவிச்சக்கர வண்டியில் என்னை சுமந்து கொண்டு ஊர் சுற்றிய,அம்மாவின் அப்பா,ஒரு நாள்,இந்த மரத்தடியில்,இது போன்றதொரு மதியப்பொழுதில் காற்று வாங்க வந்த போதுதான் இறந்து போனார்.
அவர் அதிகம் உடல் பலம் கொண்டவர்.தெலாந்து காலை தனியாக தூக்கி வைப்பார்.நாலுபேருக்கு தனியாக நின்று,தாக்கக்கூடிய பலம் கொண்டவர்.இப்படி இருந்த அந்த மனிதர்,இந்த ஆற்றங்கரையோரம்,இந்த தென்னை மரத்தடியில் காற்று வாங்க வந்தபோதுதான் இறுதி மூச்சைவிட்டர்.காற்று வாங்க ஆற்றுப்பக்கம் போன எனக்கு வியர்த்துக் கொட்டியது...ஆக காற்றுக்குக்கூட தாக்குப்பிடிக்க முடியாதவைதான்நமது உயிர்......


(... "சொல்ல மறந்த கதை" என்ற தலைப்பில்."வசந்த நிலா" நிகழ்ச்சியில் ஒலிபரப்புவதற்காய். நான் எழுதிய பிரதி....சொல்ல மறந்த கதை நிகழ்ச்சி இடம் பெறாததால்,அதற்காய் எழுதப்பட்ட பிரதியை எனது வலைப்பூவில் பதிவு செய்கிறேன்....)

Tuesday, July 5, 2011

குஞ்சு பொறியா கனவுகள்......

என் மீதான...
ஆயிரம் கனவுகளை..
அடைகாத்து வைத்திருக்கிறாய்...
உனதான கனவுகள் ...,
குஞ்சு பொறிக்கும் நாளுக்காகவும் காத்திருக்கிறாய்...
உன் கனவுகளையும், காத்திருப்புக்களையும்,
அலங்கரிப்பதற்கு என்னால் முடியாமல் தவிக்கிறேன்..
பாவம் நமது காதல் இடையில்..,
மரணித்துப் போகும் என்பதை அறியாமல் ..
கனவுகளுடன் பயணிக்கிறாய்....

வாழ்க்கையின்...
எல்லா நிறங்களையும் கொண்டு..
உன்னையும்,என்னையும்.அழகுபடுத்த..
என்னிடமிருக்கும் தூரிகையை கேட்டு....
தினம் அழுகிறாய்...
தரமுடியாமல்..உறவுகள்  என்னை தடுக்கின்றன...
நீ கனவு காணும், வாழ்க்கையின் அத்தனை ஓவியங்களும்..
இடை நடுவே சிதைந்து போகும் என்பதை அறியாமல்..
உன் கனவுகளுடன், என்னை சுமந்து செல்கிறாய்.....


நீ எனக்கு கிடைக்க வேண்டிய அழகான  பூ....
இந்தப் பூவை  அணைத்துக் கொள்ள தெரியாமல்....
தினம்..தினம்..தவித்துக் கொண்டிருப்பதை..
உன் மனமறியுமா...?
உன்னை பூஜிக்க முடியாமல்..
என் மனசு வெறுமையாகிறது...
நானும்..நீயும்..இணையமுடியாத வாழ்க்கையில்..,
கனவுகளுடன் பயணிக்கிறாய்.....

உன் சிறு புன்னகையில்...,
என் மனசை அள்ளியெடுத்தவள்..
சிறு துளி கண்ணீரில்....,
ஆயிரம் கதைகள் சொல்பவள்....
என் கண்ணீரும்,புன்னகையும் உனக்குத்தான் என ஒப்பந்தம் செய்வாள்..
பாவம்..ஒப்பந்தம் தூக்கி வீசப்படும் என்பதையறியாது,
வாழ்க்கையின் கனவுகளுடன் பயணிக்கிறாள்...

இன்னுமொரு இதயமாக எனக்குள் வந்தவள் நீ....
ஆனால்,பொருத்தமில்லா சோடிகளென....
சிலர் சாபமிடுகின்றனர்..உன்னையும்,என்னையும்..
சாபங்கள் பலமாக பிரார்த்திக்கப்படுகையில்.,
நான் நசுங்கிப்போகிறேன்..
உன்னை அணைத்துக் கொள்ளமுடியாமல்..,

வாழ்க்கையின்.,
ஆயிரம் கனவுகளுடன் நீ பயணிக்கிறாய்....
அந்தக் கனவுகளை அலங்கரிக்க முடியாமல்..,
நான் தவிக்கிறேன்.....

Thursday, June 23, 2011

ஒலுவில் ஆய்வரங்கு

தமிழ்..என்று பலமுறை நாவைப் புரட்டுங்கள், 'அமுது' என்று படும்,அதேபோல் 'அமுது' எனப் பலமுறை உச்சரியுங்கள் 'தமிழ்' என்று படும்.அதனால்தானோ பாரதிதாசன் 'தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நிகர்' என்றாரோ,

இப்படியாக தமிழ்க்கனியின் சுவை பிழிந்த சாறை சுவைக்கவென அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேச கலாசார பெருவிழாவின் முன்னோடியாக ஒலுவில் அல் ஹம்ரா மகாவித்தியாலய மண்டபத்தில் ஆய்வரங்கு காலையில் ஆரம்பமானது.பிரதேசசெயலாளர் யூ.எல்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் யூ.எல்.அஸீஸ் அதிதியாகக்  கலந்து சிறப்பித்தார்.(இவர் இப்போது கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகயிருக்கிறார்.)

ஆய்வுக்கு காத்திரமான மூன்று தலைப்புக்கள்               எடுத்துக்கொள்ளப்பட்டன.அத்துறையில் அப் பிரதேசத்தில் தேர்ந்த வளவாளர்களால் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

தென்கிழக்கின் தேனமுதக் கவிநாதமாம். நாட்டார் இலக்கியமும்,படித்தவர்களும்,பாமரர்களும் பாகுபாடின்றி பேசுகின்ற பிரதேச மொழி வழக்காறுகள், முஸ்லிம்களிடத்தில் இன்று அருகி வருகின்ற குடிவழிப்பாரம்பரியம் என்பன ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பேசு பொருள்கள்.மூன்று அமர்வுகளாக இடம்பெற்ற இந் நிகழ்வில்,நாட்டார் இலக்கியம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.நாட்டார் பாடல்களை மிகச் சிரமப்பட்டு தேடி எடுத்து ஆய்வு செய்து நூலுறுப்படுத்தியுள்ள எஸ்.முத்துமீரான் முன்னிலையில். ஆசிரிய ஆலோசகர் என்.சம்சுதீன் தனது ஆய்வினை முன்வைத்தார்.

எஸ்.முத்துமீரான் தன் முன் குறிப்பில் ,தயவு செய்து நாட்டார் பாடல் என்று கொச்சைப்படுத்த வேண்டாம்.கிராமிய இலக்கியம் என்று சொல்லுங்கள்.இந்தப்பிராந்தியத்தில் இலக்கிய ஆய்வாளர்கள் என்று சொல்பவர்கள் கிராமிய இலக்கியத்தில் ஆர்வம் காட்டத் தவறிவிட்டனர்.என்றும் அங்கலாய்த்தார்.மேலும் தாலாட்டுப்பாடல்கள்,வாழ்த்துப்பாடல்கள் என்பனவும் இதில் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.
மனித வாழ்வின் பிறப்பு முதல் இறப்பு வரையான அத்தனை வாழ்க்கைக் கோலங்களையும் சித்தரித்துக் காட்டுகின்ற நாட்டார் இலக்கியங்களை மிகவும் இலாவகமாகவும்,தெளிவாகவும் நகைச்சுவை ததும்பும் வகையிலும் தனது ஆய்வில்,ஆசிரிய ஆலோசகர்    என்.சம்சுத்தீன் முன்வைத்தார்,நகைச்சுவைப்பாடல்கள்,நையாண்டிப்பாடல்கள்,காதல் பாடல்கள்,வாதுகவிகள்,அல்லது வசைப்பாடல்கள்,தூதுப்பாடல்கள்.இறைவனிடம் பிரார்த்திக்கும் பாடல்கள்,அவலத்தை இறைவனிடம் ஒப்புவிக்கும் பாடல்கள்,திரட்டுப்பாடல்கள்,என்பவற்றை ஆய்வாளர்,ரசனைக்குகந்த விதத்தில் வழங்கினார்.அதன் பாடல்களை இஹ்சான் பாடியதும்,கிராமியச் சூழலுக்கே அனைவரையும் அழைத்துச் சென்றது.
இரண்டாவது அமர்வாக,பேச்சு மொழி வழக்காறு எடுத்துக் கொள்ளப்பட்டது.பாலமுனை பாறூக் முன்னிலையில் ஆசு கவி அன்புடீன் தனது ஆய்வினை முன்வைத்தார்.பாலமுனை பாறூக் தனது முன் குறிப்பில், மனிதன் தனது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு உதவும் ஊடகமே மொழியாகும்.காதலன் காதலியிடம் கண்களால் பேசுகிறான்.தாய் மகளிடம் உதடுகளால் பேசுகிறாள்.இதனை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.வாயைத் திறந்து பேசுகிற போது கட்டாயம் மொழி தேவைப்படுகிறது.இதுதான் ஒரு மனிதனை மொழி ரீதியாக அடையாளப்படுத்துகிறது.ஆக,மனிதனுக்கு மொழி விழி போன்றது என்றார்.

ஆசு கவி அன்புடீன் தனது ஆய்வினை முன்வைக்கின்ற போது 'கல் தோன்றி மண்தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி தமிழ்'இந்தத் தமிழ் மொழி நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் வித்தியாசமாகப் பேசப்படுகிறது.ஒருவர் பேசுகின்ற போது ,அவரது ஊரை அடையாளம் கண்டுகொள்ளலாம்.பொதுவாக கிழக்கு மாகாணத்தவர்கள் பேசுகின்ற தமிழ் நாடகப்பாங்கானது,என்று கூறிய அன்புடீன்.மிகவும் தெளிவாகவும் காத்திரமாகவும்,மொழி வழக்காற்றினை மூன்று வகையாக வகுத்துக் கூறினார்.
01.உறவு முறை
02.மதச் சடங்கு முறைகள்
03.உணவு வகைகள்...
இவ்வாறு பிரித்து ,இதில் இப்பிரதேச மக்கள் பயன்படுத்துகின்ற சொற்களையும்,பேசுகின்ற விதங்களையும் முன்வைத்தர்.

மூன்றாவது அமர்வாக கிழக்கிலங்கை முஸ்லிம்களிடையே காணப்படும் பிரதேச குடிவழிப்பாரம்பரியம் எடுத்துக் கொள்ளப்பட்டது.ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் அப்துல் லதீப் முன்னிலையில், தென் கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் விரிவுரையாளர் எஸ்.எம்.ஐயூப்  தனது ஆய்வினைச் சமர்ப்பித்தார்.அப்துல் லத்தீப் தனது முன் குறிப்பில், குடி என்பது தமிழர்களின் ஒரு பகுதியினரான முக்குவரில் இருந்து வந்தது எனவும்,ஆய்வாளர் ஐயூப் இந்தத் துறையில் சிறந்த முறையில் ஆய்வு செய்யக்கூடியவர்.சமூகவியல் துறை விரிவுரையாளராக இருப்பதனால்,இதனை சமூகவியல் கண்ணோட்டத்திலும் அணுகியிருக்கலாம் என்றும் கூறினார்.

ஆய்வாளர் ஐயூப் தனது ஆய்வினை முன்வைக்கின்ற போது,முக்குவரை  திமிலர் தொல்லைப்படுத்திய போது முக்குவர் முஸ்லிம்களின் உதவியினை நாடினர்.முஸ்லிம்கள் திமிலரை விரட்டியடித்தனர்.எனவே முஸ்லிம்கள் திமிலரை விரட்டியடித்ததனால்,முக்குவரின் பாதுகாப்புக்காகவும்,உதவி செய்வதற்காகவும்,தங்களது பெண்களை முஸ்லிம்களுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.இதன் மூலமாக குடிவழிப்பாரம்பரியம் முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவியது என்றார்.


குடிக்குத் தலைமை வகிக்கின்ற மரைக்காயர்மார்கள் காலப்போக்கில் சமூர்த்தி முத்திரை பெற்றதனால், மக்களிடத்திலிருந்த செல்வாக்கு வெகுவாக இழந்து வந்தது.ராசாம்பிள்ளை குடி,வெள்ளரசன் குடி,என்பன இன்று தமிழ்,முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுவதாகவும்,குடிகளின் வகைகளையும் அது முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவிய முறைகளையும் தெளிவாகவும்,ஆழமாகவும் ஆய்வினை முன்வைத்த ஆய்வாளரின் கருத்துக்கள் சபையோர்களைக் கவர்ந்தது.

பிரதேச செயலாளர் யூ.எல்.நியாஸ் உரையாற்றுகையில்,ஆய்வாளர்கள் தங்களது ஆய்வினை மிகச் சிறப்பாக முன்வைத்ததனை அவதானிக்க முடிந்தது.ஆனால்,நாட்டார் இலக்கிய பாடல்களுக்கு முஸ்லிம்கள் உரிமை கோர முடியாது.ஏனெனில் முஸ்லிம்களுக்கென தனித்துவமான இஸ்லாமிய இலக்கியம் இருக்கிறது.மற்றும் அவர்கள் மாத்திரம் கவி பாடினார்கள் என்பதனை முற்றாக மறுக்கிறேன்.நான் நேரடியாக சென்று கள ஆய்வினை மேற் கொண்ட போது இறக்காமத்தைச் சேர்ந்த மீரா உம்மா பாடியிருப்பதை என்னால் அறியமுடிந்தது.என்றார்.குடியானது ஒருவரை அந்தஸ்துப்படுத்தும்.அதன் மூலம் அவர், பெருமை,மமதை என்பன கொள்வதற்காகவோஅல்ல,மாறாக குலங்களாகவும்,கோத்திரங்களாகவும் தங்களை அடையாளப்படுத்துவதற்காகவே முஸ்லிம்கள் மத்தியில் குடிவழிப்பாரம்பரியம் காணப்படுகிறது.இருந்த போதும் இன்று கணிசமான முஸ்லிம்கள் மத்தியிலிருந்து அவை மறைந்து வருகிறது.என்றார் பிரதேசசெயலாளர் யூ.எல்.நியாஸ்....

இவ்வாறு ஆய்வுகளும்,அவதானங்களும் முடிவடைகின்ற போது நேரம் மூன்று மணியைத் தாண்டியிருந்தது.மிகவும் ஆழமாகவும்,சுவையாகவும்,காத்திரமாகவும் நகர்ந்து சென்ற ஆய்வில் சில குறைபாடுகளும் இருந்தன.நாட்டார் இலக்கியம் சம்பந்தமாக எஸ்.முத்துமீரான் ஆவேசப்பட்டதையும்,அங்கலாய்த்ததையும்,சிலரைக் குற்றம் சாட்டியதையும், அந்த இடத்தில் தவிர்த்திருக்கலாம்..அந்த ஆய்வரங்கிற்கு அழைக்கப்பட்டவர்களில் அநேகர் பிரதேச செயலகத்தில் பணியாற்றுபவர்கள்,இதனால் அட்டாளைச் சேனை பிரதேசத்திலே வளர்ந்து வரும் கலைஞர்களும்,இலக்கிய ஆர்வலர்களும் அங்கு அழைக்கப்படாமை பெரும் குறையாக இருந்தது.அவர்களையும் இனங்கண்டு ஏற்பாட்டுக் குழுவினர் அழைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.....
சிலர் வலிந்து  அழைக்கப்பட்டதைப் போன்று ஆய்வின் போது பின்வரிசையில் தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருந்தனர்.இன்னும் சிலர் கதிரையை விட்டு எழும்புவதும்,வெளியே போவதும்,வருவதுமாகவும் இருந்தனர்.ஆய்வுகளில் ஆர்வமுள்ளவர்களை கருத்தில்; கொண்டு  அழைப்புக்கள் கொடுக்கப்பட்டிருந்தால்,ஆய்வு காத்திரமாகயிருந்திருக்கும். மற்றும் அந் நிகழ்வினை ஒரு விடுமுறை தினத்தில் நடத்தியிருக்கலாம்.

எது எப்படியிருந்தாலும், இப்பிரதேசத்தில் பல வருடங்களுக்குப் பின்னர்,இது போன்ற கலாசார விழாவினை மிகச் சிரமப்பட்டு ஏற்பாடு செய்த பிரதேச செயலகம்,பிரதேச கலாசார பேரவை என்பவற்றை பாராட்டத்தான் வேண்டும்.கலைகளையும்,கலைஞர்களையும் ஊக்குவிப்பதற்காக இது போன்ற நிகழ்ச்சிகளை வருடா வருடம் நடத்த வேண்டும்.....

( இது,2007.12.16 ம்திகதி ஞாயிற்றுக்கிழமை தினகரன் பத்திரிகையில் வெளியான எனது கட்டுரை )


Tuesday, June 21, 2011

காற்றலையில் பேசிய கவிதை......

தாலி கட்டி உனக்கு விலங்கிடவில்லை...
தாலி கட்டி உனக்கு சிறகுகள் தந்திருக்கிறேன்....
தாராளமாய்...நீ..விரிக்கலாம்.....

******************
கண்ணீர் சிந்தினேன்...
அது மழையாகப் பொழிந்தது...
காதலை தூவினேன்..
அது நிலவாக குளிர்ந்தது.......

**************


நீ இரவுகளின் ஒளியா..
அல்லது என் வாழ்வின் அமாவாசையா....
நீ என் கனவுகளின் நினைவா...
அல்லது என் வாழ்வின் புகைப்படமா....
நீ  என் எதிர்காலத்தின் தோரணங்களா....
அல்லது என் இளமையின் ரணங்களா.....?

*********************
தீக்குச்சி பற்றிக்கொண்டால்,
காற்று அணைத்துவிடும்...
நம் பார்வை பற்றிக் கொண்டால்...,
யார்தான் உண்டு அணைப்பதற்கு......

**********************
அவதாரங்களையும்,தீர்க்கதரிசனங்களையும்..,
பெறுகிறவள் நீ.......
அவமானங்களையும்,தரித்திரங்களையும்...
பெறுகிறவன் நான்......

***********************
இமைகளால் மூடிக் கொள்ளும் விழிகளையும்..,
உதடுகளால் போர்த்திக் கொள்ளும் வார்த்தைகளையும்..,
மறைத்து வை.......
ஆனால்,உன் மனக்கதவை எனக்காக திறந்து வை.......

**********************
உன்னை தேடுகிறேன்....
எந்தத் தேசத்தில் இருக்கிறாய்...
நிரந்தரமில்லா பிரிவில் முகவரியை தொலைத்திருக்கிறாய்..
சிறகுகளை கட்டிக்கொண்டாவது உன்னை சேர்வேன்
அந்த நம்பிக்கையோடு நானிருக்கிறேன்......

**********************
கண்களை இறுக மூடிக்கொண்டாலும்...
காதலின் இறுக்கம்....
என் நெஞ்சுக்குள் சுடர்விட்டெரிகிறது...
அதை உன் மனமறியுமா...?

***********************
நீ வந்த போது..,
வாழ்வுக்காய் போராடிய மனம்..,
நீ போன பிறகு..,
வாழ்வு மரணத்திற்காய் போராடுகிறது.....

********************
கனவுகளை சுருட்டிக்கொண்டு..,
இரவுகள் விடிவதை விட..
நான் உன் விழிகளில் விழும் வரை..
விடியாத இரவுகளாகயிருக்கட்டும்.......

**********************
சந்தோஷங்களால் சங்கீதம் இசைக்கும் நீ....
உன்னை பார்க்கத் துடிக்கும்..
என் மனதின் சோகம்..
என் இசைத் தட்டுக்குள் ஒலிப்பதை உன் மனமறியுமா..?

**********************
நானும் நீயும்
வாழ்க்கைச் சமூத்திரத்தில்..,
கரையில் இருந்து நீச்சலடிக்கிறோம்..
பாவம்..,வாழ்க்கை எட்டாத தூரத்தில்..
உனக்கும் எனக்கும்.....
********************
அந்திப் பொழுதில்..,
நிழல்கள் நீள்வதைப் போல்..
நீயில்லாத இரவுகளில்...
உன் நினைவுகள் என்னுள் நீள்கிறது.....

*****************
நான் கரையில் நின்றழுது...
காதலைத் தேடினேன்....
நீயோ..,கடலில் குதித்தல்லவா.
காதலை நீக்க நினைக்கிறாய்.....

**********************
இரவுகளின் தாலாட்டில்...
உறவுகள் தூங்கியிருக்க...
அந்த இரவுகளிலும்..
நாம் முரண்பட்டுக் கொள்கிறோம்.......
******************
உன் இதயத்தை..,
பூந்தோட்டமாக வைத்திரு....
அதில் வண்டாக..,
நான் வருவேன்...காத்திரு......

********************

(...வசந்தநிலா நிகழ்ச்சியின் போது பாடல்களுக்கிடையில் நான் சொன்ன கவிதைகள் இவை..,
இரவுகளைத் தாலாட்டும் அந்த இரவுகளில் அதிகம் சோகப்பாடல் ஒலிபரப்புவதால். அதற்கான கவிதைகளும் சோகமானவைதான்...வாசித்துப்பாருங்கள்.....)