Thursday, September 22, 2011

வாடகை வீடு....


பல்லாயிரம்
கனவுகள் சுமந்து
வாடகை வீட்டில்
வாழ்க்கை கழிகிறது....

நிரந்தரமில்லா
இந்த வாடகை வீட்டில்
ஒரு அந்நியனைப் போல்
குடியிருக்க வேண்டியிருக்கிறது.....

யார் வந்தாலும்
அடுத்த வீட்டுக்காரன்
தப்புத் தப்பாய் பார்க்கிறான்
ரத்த உறவுகள் வந்தாலும்
முறைத்துப் பார்க்கிறான்
ஒர் எதிராளியைப் போல்
பயந்து பயந்து  அந்த வாடகை வீட்டில்
வசிக்க வேண்டியிருக்கிறது....

எங்கள் ஊர்களில்
சுதந்திரமாய்
சுற்றித் திரிந்த
எங்களுக்கு
வாடகை வீட்டில்
நிம்மதியின்றி உறங்க வேண்டியுள்ளது.
அரசியலைப் போல்
வாடகை வீட்டிலும்
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்....

வாடகை வீட்டில்
என்ன நடந்தாலும்
எட்டிப்பார்க்காத அந்த வீட்டு உரிமையாளன்
மாத முடிவில்
வீட்டு வாடகைப் பணம் பெற
அதிகாலையிலேயே வந்துவிடுவான்
வாடகை வீட்டில் வசிப்பவர்களும்
உங்களைப் போல்
வாழ்க்கையை நகர்த்தும் மனிதர்கள்தான்......

தலை எழுத்து
தலை நகரில் வாழ வைக்க
வாடகை வீடு மாறி மாறி
வாழ்க்கையும் அலுத்துப் போகிறது
வெறுத்துப் போன வாடகை வீட்டில்தான்
வாழவேண்டியுமிருக்கிறது....

ஒவ்வொரு முறையும்
வீடு மாறும் போதெல்லாம்
சந்தோஷங்களையும்
சோகங்களையும்
பகிர்ந்து கொண்ட
அந்த வாடகை வீடு
துக்கத்தோடு விடை கொடுக்க
நண்பர்களும்-நானும்
மூட்டை முடிச்சுக்களுடன்
இன்னொரு வாடகை  வீட்டுக்கு
புறப்பட்டுப் போகிறோம்
இதுதான் இந்த நகரத்து
வாடகை வீட்டு வாழ்க்கை......

Tuesday, September 20, 2011

உணர்வுத் துளி......


வழமை போல்
நகர மறுக்கும்
உனது ஞாபகங்கள்
இன்று சில நிமிடங்கள்
என்னுடன் முரண்பட்டுக் கொண்டன......
******************

அதிகம் பேசாத
நமது காதல் பற்றி
எப்போதாவது நீ நினைத்ததுண்டா....?
 ********************

காத்திருந்து,ஏமாந்து,கவலைப்பட்டு
முட்டாளாகிப் போன
என்னைப் பற்றி
இனி பாடப் போவதில்லை......
 **********************

நிகழ்ச்சி இல்லாத
அறிவிப்பாளரைப் போல்
அரங்கேற்றம் இன்றியே
அடங்கிப் போகிறது நமது காதல்......
********************

 வெறுக்கப் பட்ட
என் உணர்வுகள் பற்றி
இனி கவலைப் படப் போவதில்லை
அது பற்றி
இனி கவிதை எழுதப் போவதில்லை.....
 *********************

தூரத்தில் நிற்கும் உறவுகள்
துரோகம் இழைக்கும் நட்புக்கள்
குற்றம் சொல்லும் காதல்
மனசும்,மண்ணாங்கட்டியும் என
வாழ்க்கை கழிகிறது......




Monday, September 19, 2011

நீ இல்லாத நேரம்...


நீ என்னை அரவணைத்து
பின்னர் வீழ்த்தி
இன்னுமொருவருடன்
வாழப் புறப்பட்ட போதும்.
கடிகார முட்களாய்
நீ என்னை சுற்றிக் கொண்டேயிருக்கிறாய்.....

வார்த்தைகளால் முட்டி மோதி
நீ என்னிடம் தோல்வியுற்ற வேளை
நமது காதல் வீழ்ந்தது.
அதற்கு பிறகும்
எனது வீட்டு சுவர்க் கடிகாரத்தைப் போல்
எனக்குள் நீ வலம் வருகிறாய்......

நீ விடைபெற்ற
அந்தக் கணத்தில்
பிரியமான ஒருவரின் இழப்பின் பின்னரான சோகமாய்
நான் வீந்து நொறுங்கினேன்
அப்போதும் என் கைக் கடிகாரத்தைப் போல்
எனக்குள் நீ என்னை சுற்றி சுற்றியே
பின் தொடர்ந்து வருகிறாய்.......

Monday, September 12, 2011

பெருநாள் கவியரங்கம்......


நான் தொகுத்து வழங்கிய வசந்த நிலா நிகழ்ச்சியைப்பற்றி தினக்குரல் பத்திரிகையில் ஒரு நேயர் பாராட்டி எழுதியிருந்தார்.அந்த நிகழ்ச்சிக்காக நான் நிறையவே உழைத்திருக்கிறேன்.கடந்த நோன்பு பெருநாள் தினத்தன்று பெருநாள் சிறப்பு கவியரங்கம் ஒன்றை தயாரித்து வழங்கியிருந்தேன்.அந்த கவியரங்கு பற்றி என் சக அறிவிப்பாளர்களும்,நண்பர்களும் வாழ்த்தி பேசியிருந்தார்கள்.அந்தக் கவியரங்கம் பற்றி 2011.09.11 ம் திகதி தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையில்.ஒரு சகோதரி எழுதியிருந்தார் நான் தயாரித்து வழங்கிய அந்த கவியரங்கத்திற்கு நான் இட்ட பெயர் "பிறைத்தோணியில் பிரயாணம் .செய்பவர்கள்".தினகரன் பத்திரிகையில் வெளியான விமர்சனத்தை உங்கள் வாசிப்புக்காக தருகிறேன் வாசித்துப் பாருங்கள்.

வானலை வழியே பெருநாள் கவியரங்கம்.
கடந்த 31.08.2011 நோன்புப் பெருநாள் தினத்தன்று வசந்தம் எப்.எம்.வானொலி வழங்கிய பெருநாள் விருந்தாய் அறிவிப்பாளர் ஏ.எம்.அஸ்கர் தயாரித்தளித்த "பிறைத்தோணியில் பிரயாணம் செய்வார்கள்" என்ற சிறப்பு கவிதை அரங்கு கேட்டு மகிழ்ந்தோம்.
கவிஞர் நஜ்முல்ஹூசைன்,தலைமையில், சுஹைதா கரீம்,முர்ஷிதீன்,ரவூப்ஹஸீர்,கிண்ணியா அமீர் அலி,கவி வாசித்தனர்.நான்கு கவிஞர்களும் சிறப்பாக எழுதியிருந்தார்கள்,சுஹைதா பெண்களுக்காகக் குரல் கொடுத்தர்,முர்ஷிதீன் மத்திய தரைக்கடலில் கப்பலோட்டியவர்கள் பிறைத் தோணியில் பிரயாணிக்கும் அவலம் சொன்னார்.ரவூப் ஹஸீர் சிரிக்க வைத்த அதே நேரம் சிந்திக்க வைத்தார்,அமீர் அலி சத்தத்தோடு மட்டும் வந்தார்.தலைவர் நஜ்முல்ஹூசைன் எல்லோரையும் சிக்கனமாகக் கூப்பிட்டார்.அவர் தொகுப்பு நன்றாக இருந்தது.மொத்தத்தில்,பிறைத்தோணியை எங்கள் செவிகளில் சேர்த்து விட்ட அஸ்கர் பாராட்டுக்குரியவரே..

எழுதியவர்:செல்வி முஸ்னா நிஸாம்
ஏறாவூர்...

( நிகழ்ச்சியை கேட்டு அவதானித்து எழுதிய சகோதரிக்கு நன்றி..)

Sunday, August 14, 2011

காத்திருப்பு.........


ஒரு கமராக் காரனைப் போல்
உன்னை பதிவு செய்து வைத்துள்ளேன்..
என் சேமிப்பு பெட்டகம் முழுவதும்
நீதானிருக்கிறாய்........

ஒரு வாடகைக் கமராக்காரனைப் போல்
ஒற்றைக் கண்ணால்
உன் அழகை ரசிப்பதற்காய்
வழி நெடுகிலும் விழி வைத்து காத்திருக்கிறேன்
நீ தாமதிக்கும் அந்த பொழுதுகளில்
என் விழிகள் விம்முகின்றன..
உனக்காய் காத்திருந்த வழிகள் இருளாகிப் போகின்றன........

என் இதய அறைகளுக்குள்
குடியேறிய உன்னை
தங்கத் தட்டில்  தாலாட்டி மகிழ
ஒரு நகைக் கடையை  தேடித் திரிகிறேன்..
அந்த தங்கக் கடை தூரத்தில் வாடகைக்காய் காத்திருக்கிறது..
அந்த இட வெளிக்குள் என் மனக் கோட்டையை தகர்ப்பாயா..
அல்லது என்னை மறந்து
இன்னுமொருவரின் இல்லறத்தை
உன் தங்க மனதால் அலங்கரிப்பாயா.....?

என் பெட்டிகள் முழுவதும்
பட்டுச் சேலைகளால் நிரம்பியுள்ளன
பூவாய் இருக்கும் உன்னை
போர்த்திக் கொள்ள வண்ண வண்ண சேலைகள் காத்திருக்கின்றன
சோலை வனமாய் மணம் பரப்பும் உன்னை
ரசிப்பதற்காய் நான் வண்டாய் காத்திருப்பேன்.
இப்படியெல்லாம் காத்திருக்கும் என்னை
நீ பாலை வனமாய் மாறி
சில நேரம் சுட்டெரிப்பாயோ
என மனம் பதை பதைப்பதுமுண்டு......

உன்னை என் மனதுக்குள் பதிவு செய்து
ஒரு வாடகை கமராக் காரனைப் போல் காத்திருக்கிறேன்..
நீ தாமதிக்கும் அந்த பொழுதுகளில்
என் விழிகள் விம்முகின்றன
தற்காலிகமாய் வாடகைக் கமராக்காரனாய் மாறியுள்ள என்னை
நிரந்தர வாடகை கமராக்காரனாய் 
வீதியெல்லாம் அலைய வைப்பாயோ.....?





Monday, August 8, 2011

யார் விட்ட தவறு........

இறை இல்லம்
மனிதர்களால் நிரம்பி வழிகிறது..
அழுதழுது அவரவர் பாவங்களை கழுவிக் கொண்டிருக்கின்றனர்...
அதன் வாயிலில்..,
வறுமையின் கண்ணீரோடு
ஒரு இளம் மாது நிற்கிறாள்........

அறிமுகமில்லாத
அத்தனை பேரிடமும்
தன்னை அடையாளப்படுத்தி
கையை நீட்டி கெஞ்சுகிறாள் அந்த இளம் மாது...
அவள் இடுப்பில் ஒரு கைக் குழந்தை
அழுது கொண்டிருக்கிறது........

சில சில்லறைகளுக்காக
வருவோர்,போவோர் எல்லோரையும்
பரிதாபமாய் பார்க்கிறாள்...
சிலர் கொடுக்கின்றனர்...
இன்னும் சிலர் பாவாய் பார்த்துவிட்டு போகின்றனர்
வேறு சிலர் தூரத்தில் நின்று விமர்சிக்கின்றனர்...
ஆனால் அவள் தன்மானம் இழந்து
கெஞ்சி கெஞ்சி கையை  நீட்டுகிறாள்.....

சுமைகளை
சுமக்க முடியாத அந்த இளம் பெண்
ஆயிரம் சுமைகளை சுமந்து கொண்டு
இறை இல்லத்தின் வாசற்படியோரம்
கை நீட்டி காசு கேட்கிறாள்...
ஆயிரமாயிரம் சுமைகளை
அவள் மீது சுமத்தியது யார்...?

தன் தோழிகளுடன்
இனிமையாய் பொழுதைக் கழிக்க வேண்டியவள்
பள்ளிக்கூடம் சென்று பாடங்களை படிக்க வேண்டியவள்
தனது காய்ந்து போயிருக்கும்
குடலை ஈரமாக்குவதற்கும்
தன் தோழில் சுமந்திருக்கும் குழந்தைக்கு
பால் கொடுக்க தன் மார்பில் பால் சுரக்கவில்லை
நல்லா சாப்பிட்டு நாளாச்சு என்றும்
கெஞ்சி கெஞ்சி காசு கேட்கிறாள்
அந்த அழகான இளம் பெண்....

அந்த இளம் பெண் அழகாயிருக்கிறாள்
யார் அவளை பிச்சைக் காரியாக்கியது..
சிலர் அவளிடம் போய் விசாரிக்கின்றனர்...
இன்னும் சிலர் தன் இச்சைகளைப் போக்க
அவளை அணுகுகின்றனர்..
வேறு சிலர் விபச்சாரியாக்க முயல்கின்றனர்.....


இல்லாத அவளுக்கு
உள்ளவர்கள் கொடுத்திருந்தால்
இல்லத்திலே தங்கியிருந்திருப்பாள்..
இல்லாத போது இவளைப் போல்
பல சுமையாக்களும்,பாத்திமாக்களும்
இறை இல்லம் என்ன..?
வீதி,வீதியாய் அலைவதை தவிர்க்க முடியாது..
சில நேரம், சில நோட்டுக்களுக்காய்
தன் கற்பையும் வாடகைக்கு விடக்கூடும்......


அந்நிய ஆடவரிடமிருந்து
மறைந்து வாழ வேண்டிய நம் சமுதாயத்தின் கண்
அறிமுகமில்லாதவர்களிடம்
கெஞ்சி கெஞ்சி காசு கேட்கிறாள்
இப்போது அவள்
பாவம்  பிச்சைக்காரியாய் அடையாளமாகிறாள்..
வாழ்வதற்காய் அவள்
எத்தனை காமுகர்களிடம் போராடப் போகிறாளோ....?


Sunday, August 7, 2011

எப்படியானாலும்...நீ...



உன்னை சந்திப்பதற்கு
உன் தெருவுக்கு வருவேன்
நீ வரவேமாட்டாய்...
உன்னைக்காணாத அந்த நிமிடம்
தவிப்புக்களால் கரைந்துபோகும்....
இப்போது என்னை பார்க்க தினமும் தவிக்கிறாய்.
முன்னரைப்போல்
உன் தெருவுக்கு இப்போது என்னால் வரமுடியாது....
காலமும்,என் தொழிழும் உன்னை, என்னிடமிருந்து
பிரித்து வைத்திருக்கிறது.........



உன்னோடு பேசமுடியாவிட்டாலும்...,
உனதான ஞாபகங்கள்
என் மனசுக்குள் மௌனமாயிருக்கிறது...
உன் மௌனம் என்னை கவிதை எழுத வைத்தது..
என் மௌனம் உன்னை தனிமைப்படுத்தியது..
நான் உன் தெருவுக்கு வராவிட்டாலும்
உன்னோடு பேசமுடியாவிட்டாலும்
நீ உனக்கான பாதையிலும்
நான் எனக்கான பாதையிலும்
மௌனமாய் பயணிப்போம்......


உன்னிடம் பகிர
என் மனசில் ஆயிரமாயிரம்
கதைகளிருக்கிறது.....
அவை செல்லாக்காசாகிப்போகுமோ என்று
என் மனசு பதை பதைப்பதுமுண்டு......
நீ அந்தக் கரையிலும்
நான் இந்தக் கரையிலும் நிற்கிறோம்..
ஒருவரையொருவர் கடக்க முடியாமலும் தவிக்கிறோம்....




நான் உன் தெருவில் அலைந்த போது
என் பெறுமதி உனக்கு தெரியவில்லை
இப்போது என்னை பலர் பாராட்டும் போது
நான் உன் பக்கம் இருக்க வேண்டுமென விரும்புகிறாய்..
உன் பக்கம் என்னால் வரமுடியாவிட்டாலும்
உன்னை அவ்வப்போது நினைத்துக்கொண்டுதானிருக்கிறேன்......