Thursday, October 20, 2011

இனியும் வேண்டாம்...


 மரண பயம்
 உயிரெல்லாம் ஆக்கிரமிக்கிறது...
 சந்தோஷமின்றி
 நாட்கள் நகர்கிறது....
 நிம்மதியின்றி
மனசு அலை பாயுகிறது...
நீதிக்காய்
பாதங்கள் தெருவெல்லாம் திரிகிறது...
வாழ்தலில் விருப்பமின்றி
ஏக்கத்துடன் வாழ்க்கை கழிகிறது...
............................................................................

Wednesday, October 19, 2011

உயிரிலே கலந்து...


அந்தி வானம் கலைந்தோடுகையில்
உன் நினைவுகள் மேகமாய்
நகர்ந்து கொண்டிருக்கிறது
உனதான பாசம்
என்னுள் கலைந்து கரைகிறது..

தினம் உச்சரிக்கும் பாடலாய்
என் காதுகளுக்குள் ஒலிக்கிறாய்
நான் எழுதும் கவிதையில்
நிழலாய் வருகிறாய்
நான் நேசிக்கும் புத்தகமாய்
என் மனதுக்குள் வாசிக்கப்படுகிறாய்
உன் புன்னகையைப் போல்
எனக்குள் மகிழ்ச்சியாய்
நீ இருக்கிறாய்...

சில வேளை
அடம்பிடித்தலால் முரண்படுகிறாய்
வார்த்தையின் விலகுதலால்
வெறுத்துப் போகிறாய்
ஆதலால்,உன் வாசமின்றி
நான் வாடிப் போகிறேன்
நான் மலரவும், நீவாழவும்
வரம் கேட்டு நிற்கிறேன்...

Monday, October 17, 2011

நிறமற்ற கனவு...


மறந்து போன
நமது கடந்த நாட்களின் பாடல்
இனி மீண்டும் வரப் போவதில்லை...

மொழிகளை ஊமையாக்கி
உணர்வுகளை ஓரங்கட்டி
சைகைகளோடு பேசிக் கொண்ட போதும்
வலிகள் எதுவுமின்றி
மெதுவாய் பயணித்தது நமது காதல்...

வசீகரமும்,கவர்ச்சியும்
காதலின் படிமங்களுமின்றி
நாம் காதலர்களாக மாற்றப்பட்டோம்
ஆனால்,உலகக் காதல் போல்
நமது காதல் படரவேயில்லை...

துண்டிக்கப்பட்ட
உறவை மீளமைக்க
நாம் வடித்த கண்ணீரின் அளவு
சோகப் பாடலின் இசையைப் போல்
தேங்கிக் கிடக்கிறது என் மனதில்...

சூரியன் உதித்து மறையும் போதெல்லாம்
நான் வந்த உன் தெருவும்
நீ எட்டிப் பார்க்கும் ஜன்னலும்
குரல் எழுப்பும் உன் விழிகளும்
இப்போது முகவரியில்லாதவரினால்
வேட்டையாடப்பட்டுள்ளது...

 உனக்கான பரிசுகள்
உன்னை தேடி வரும் நாட்கள்
வெறுமையாய் என்னை கடந்து செல்கிறது
இப்போதுகனவுகளற்ற பொழுதுகளாய்
ஒவ்வொரு நாளும்
அர்த்தமின்றி பிறக்கிறது...



Tuesday, October 11, 2011

காவல்காரனாய் உன் பூந் தோட்டத்தில்


முழுவதுமாய் அவளை
ரசித்து முடிக்கும் முன்
என்னை உதறிவிட்டுப் போகிறாள்
புன்னகையோடு பார்ப்பவள்
இப்போது முறைத்து பார்க்கிறாள்...

அணைத்துக் கொண்டவள்
அராஜகம் செய்து தூரப்படுத்துகிறாள்
உன்னோடு எப்படி போராடுவேன்
வழியின்றி தடுமாறுகிறேன்
நான் வரைந்த நேர் கோட்டில்
உன் விரல்கள் புள்ளடியிடுகின்றன....

நாட் கணக்கில்
மனதார பேசியவள்
எதிரியைப் போல் தூர நின்று பார்க்கிறாள்
ஒரு விநாடி கொடு
என் நெஞ்சில் இருக்கும்
என் எதிர்பார்ப்புக்களை
உன் மடியில் கொட்டி விடுவேன்...

சந்தோஷங்களை
எனக்குள் உற்பத்தி செய்தவள்
சோகங்களை சொந்தமாக்கி விட்டுப் போகிறாள்
உன்னை அழகாய் வர்ணித்த என் பேனா
இப்போது சோகமாய் கசிகிறது கடதாசியில்...

என்னை புகழ்வதற்கு
நான் நியாயவாதியுமல்ல
உன்னை அசிங்கப் படுத்த
நான் இரக்கமற்றவனுமல்ல
என் உணர்வுகளை மதிக்காத போதுதான்
என்னை உரத்துச் சொல்கிறேன் உனக்கு அவ்வளவுதான்...

உன்னைத் தவிர
நான் நேசித்தவையெல்லாம்
மறந்து போய்விட்டது
இன்னும்
மறக்க முடியாமல் இருப்பது நீ மட்டும்தான்
ஒரு காவல் காரனாய் காத்திருப்பேன்
உனக்காக நான் பாத்தி கட்டிய பூந் தோட்டத்தில்
என்றாவது என்னை
புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையில்...



Thursday, October 6, 2011

நிஜமில்லா நிழலில்....


வார்த்தைகளை கோர்த்து
உன்னை சோடித்து
உன்னை ஏமாற்றுவதில்
எனக்கு விருப்பமில்லை...

வார்த்தைகளின் மாயைக்குள்
மயங்கி விழுந்து
மீள முடியாமல்
போராடும் பலரைப் போல்
நானும் நீயும்
வாழ்க்கையில் இணையாத போது
அந்தப் பாவத்தை எங்கு போய் தீர்ப்பேன்
ஆக.உன்னை ஏமாற்றுவதில்
எனக்கு உடன் பாடில்லை...

இனிப்பாய் பேசலாம்
உணர்வுகளை பகிரலாம்
வார்த்தைகளை விழுங்கி
கொஞ்சி மகிழலாம்
கன நேரம் கதை பேசி
காலம் கடத்தலாம்
புல்வெளியில்
நானும் நீயும் உருண்டு புரள ஆசை வரலாம்
இத்தனையும் பொய்யாகின்ற ஒரு நாளில்
நானும் நீயும்
வெறுத்து வாழ்வோம்
ஆக.இனி காதல் வார்த்தைகள் பேசி
 ஏமாற்றுவதில்
எனக்கு இஷ்டமில்லை...

தடுக்கப் பட்டவைகளை
விரும்பும் போது
பலரால் நாங்கள் வெறுக்கப்படலாம்
இல்லாத பொல்லாத  வார்த்தைகளால்
சில நேரம் இகழப்படலாம்
நிஜமற்ற  வாழ்க்கையில்
நிழலாய் பயணிப்பதற்கு
என் மனம் உறுத்துகிறது
உனதான  பாதையில் நீ பயணி
எனதான பாதையில் நான் போகிறேன்...

Thursday, September 29, 2011

கனவில் வரைந்த கடிதம்...

 
வேலை நிமித்தமாக பல வருடங்களாக வெளியூரில் வசிக்கின்றேன்.விடுமுறையில் ஊருக்குப் போய் திரும்புகின்றபொழுது,திருமணத்திற்கு பின் சந்திக்கின்ற முதல் பிரிவைப் போல் ஓர் சோகம் என்னுள் குடி கொள்ளும்.
 
 அம்மா,அப்பா,அக்கா.அண்ணா,தங்கை,மருமக்கள்,நண்பர்களிடமிருந்து விடைபெறும் பொழுது ஓரத்தில் நின்று கொண்டு விழி நிறைந்த கண்ணீரோடு என்னைப் பார்க்கும் காதலியின் இனம் புரியாத பாசம் பயணத்திற்காய் புறப்பட்ட என்னை  ஒரு அடியேனும் நகர விடாமல் அந்த இடத்திலேயே கட்டி வைக்கும்.காதலிப்பதற்கு முன் எத்தனையோ நாட்கள் தனிமையில் இருந்திருக்கிறேன்.உணர்ந்ததில்லை,இப்போதுதான் என்னை தனிமை தத்தெடுத்துக் கொண்டதாய் ஒரு தவிப்பு காதலின் கட்டுப்பாட்டுக்குள் கடந்து செல்லும் ஒவ்வொரு காதலர்களின் நினைவுகளும் கண்ணாடியில் தோன்றும் பிம்பங்களாய்  என் மனக் கண்ணாடியிலும் பிரதிபலிக்கின்றன. 
 
காதலைச் சொல்ல உன் தெருவுக்கு வந்த முதல் நாளில் ஏற்பட்ட ஸ்பரிஷத்தில் என் உடல் நடுங்கியது.முதல் வார்த்தையை பரிமாறிக் கொள்வதில் விழிகளுக்கும்,இதழ்களுக்கும் இடையே நடந்த வெட்கப் போராட்டம்,நான் நிமிர்வதும் நீ குனிவதும், நான்குனிந்த பின் நீ விழிகளை உயர்த்திப் பார்ப்பதும்.அந்த அழகிய நிமிடங்கள் என நினைத்து நினைத்து ஆனந்தப்பட ஆயிரம் நினைவுகள் என் மனதில்.

பல மனிதர்களின் உணர்வுகளின் மொழிகளையும்,கணினி நுட்பங்களையும்,கற்றுத் தெரிந்து கொண்ட எனக்கு நம் காதலின் உனதான வெட்க மொழியை புரியாமல் தடுமாறியிருக்கின்றேன் பல முறை,நீ கண்களை உருட்டுவதும்,மௌனம் சாதிப்பதும்,புன்னகைப்பதும், உன் வெட்க மொழியில் வெவ்வேறு அர்த்தமாமே,எந்த ஒரு அகராதியிலும் படித்ததாய் நினைவில் இல்லை இது போன்ற அழகிய அர்த்தங்களை.


ஒரு நாள் மாலைப் பொழுதில் கண்ணை மயக்கும் சுடிதார் அணிந்து வீதியால் நடந்து வந்த அழகை வண்டுகள் பார்த்திருந்தால் பொறாமைப் பட்டிருக்கும்,மயில்கள் மயங்கி போயிருக்கும்.மழை பெய்து ஓய்ந்த பின் சூடான தேநீர் கோப்பையுடன்,இனிப்பான பலகாரத்தட்டுக்களுமாய் என் அருகில் அமர்ந்து ஆசையாய் ஊட்டினாய்.உன் அன்பான தித்திப்பால் அப்போது இனிப்பான பலகாரம் இனிப்பின்றி போனது ஒன்றும் ஆச்சரியமில்லை.

வீட்டுக் கூரையில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளியின் சிதறல்களை ரசிக்கும் குழந்தையைப் போல் உன் மௌன மொழியை ரசிக்கவேணும்,மிட்டாய்க்காய் அடம் பிடித்து அழும் சிறு பிள்ளையைப் போல் உன்னிடம் செல்லத்தனமாய் அழுவதற்கேனும் முன்னையக் காட்டிலும் ஆவலாய் இருக்கிறேன்...

 பாவம் கனவு பலிக்கவில்லை இப்படி எத்தனை நாட்களுக்கு   கனவில்  கடிதம் எழுதுவது....



Tuesday, September 27, 2011

உன் தூரல் என்னில்.....


நீண்ட இடவெளிக்கு பின்னர்
உலர்ந்து போன  என் மனதில்
மழைத் தூரலாய் விழுந்தாய்
அது கோடைக்கு பின்னரான
மழையாய் என்னை நனைத்தது.....

பூ வாசமாய் மணம் பரப்பும் உன்னை
அமைதியான நதியைப் போல் நேசித்தேன்
ஏக்கங்களுடன் விழுங்கிய
என் காதல் வார்த்தைகளை
சிறு துளியளவு கூட புரிந்து கொள்ளவில்லை
உன்னை சந்தித்து திரும்பும் போதெல்லாம்
ஏமாற்றத்துடன் விடை பெறுவேன்.........

வாழ்க்கை கடலில் பயணிப்பதற்காய்
நான் கட்டிய கனவுக் கப்பல் திசைமாறிப்போயுள்ளது
ஆதலால் என் மனக் கப்பலும் உடைந்து போனது
நீண்ட இடவெளிக்குப் பின்னர்
இப்போதுகளில் உன் பாசத்தை
மழையாய் என் மீது கொட்டுகிறாய்
எப்படி சரி கட்டுவேன்
உன்னால் உடைந்து போன என் மனக் கப்பலை....

 நீ எழுத்துப் பிழைகளுடன்
அனுப்பி வைத்த கவிதைகளை
என் சின்ன வயதுப் புகைப் படத்தை
பார்த்து மகிழ்வதைப் போல்
இப்போதுகளில்
நான் அப்படி மகிழ்வதை தவிர
வேறென்னதான் செய்ய முடியும்...

 நீண்ட நாட்களுக்கு பிறகு
மயிலிறகு வார்த்தை கொண்டு
என் மேனியை நீ தடவினாய்
அது மென்மையாய் என்னை தாலாட்டியது
உனக்குள் நான் இல்லாத போதும்
எனக்குள் நீ எப்போதும் ஞாபகமாய் பயணிப்பாய்....