Tuesday, October 11, 2011

காவல்காரனாய் உன் பூந் தோட்டத்தில்


முழுவதுமாய் அவளை
ரசித்து முடிக்கும் முன்
என்னை உதறிவிட்டுப் போகிறாள்
புன்னகையோடு பார்ப்பவள்
இப்போது முறைத்து பார்க்கிறாள்...

அணைத்துக் கொண்டவள்
அராஜகம் செய்து தூரப்படுத்துகிறாள்
உன்னோடு எப்படி போராடுவேன்
வழியின்றி தடுமாறுகிறேன்
நான் வரைந்த நேர் கோட்டில்
உன் விரல்கள் புள்ளடியிடுகின்றன....

நாட் கணக்கில்
மனதார பேசியவள்
எதிரியைப் போல் தூர நின்று பார்க்கிறாள்
ஒரு விநாடி கொடு
என் நெஞ்சில் இருக்கும்
என் எதிர்பார்ப்புக்களை
உன் மடியில் கொட்டி விடுவேன்...

சந்தோஷங்களை
எனக்குள் உற்பத்தி செய்தவள்
சோகங்களை சொந்தமாக்கி விட்டுப் போகிறாள்
உன்னை அழகாய் வர்ணித்த என் பேனா
இப்போது சோகமாய் கசிகிறது கடதாசியில்...

என்னை புகழ்வதற்கு
நான் நியாயவாதியுமல்ல
உன்னை அசிங்கப் படுத்த
நான் இரக்கமற்றவனுமல்ல
என் உணர்வுகளை மதிக்காத போதுதான்
என்னை உரத்துச் சொல்கிறேன் உனக்கு அவ்வளவுதான்...

உன்னைத் தவிர
நான் நேசித்தவையெல்லாம்
மறந்து போய்விட்டது
இன்னும்
மறக்க முடியாமல் இருப்பது நீ மட்டும்தான்
ஒரு காவல் காரனாய் காத்திருப்பேன்
உனக்காக நான் பாத்தி கட்டிய பூந் தோட்டத்தில்
என்றாவது என்னை
புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையில்...



No comments:

Post a Comment