Saturday, October 29, 2011

உன்னை பாடும் என் வரிகள்...



எனக்கு பிடித்த பாடலை ஒலிபரப்பி
கண்ணை மூடி ரசித்துக் கொண்டிருப்பது போல்
என்னை பிடிக்காத அவளின்
கவிதைகளை தினமும் வாசிக்கிறேன்
ஏனெனில் கவிதையில்
நானும் அவளும் ஒரே பல்லவி...

பாடல்களுக்கிடையில்
நான் வாசிக்கும் கவிதையில்
நீ அதிகம் வசிக்கிறாய்
அந்த கவிதையை காதலிப்போர் அதிகம்
ஆனால் நீ காதலிக்கவில்லை
காரணம் கேட்டால்
ஒரு வக்கீலைப் போல்
வாதிடுகிறாய்...

பிடித்த நிகழ்ச்சியில்
பேச வாய்ப்புக் கிடைக்காது
கவலைப் படும் ஒரு தீவிர ரசிகனைப் போல்
உன் அருகிலிருந்து பேச
வாய்ப்பின்றி ஏமாந்து போகிறேன்...

நேயர் விருப்பத்தில்
பிடித்த பாடலை கேட்க
அழைத்து,அழைத்து 
தொடர்பு கிடைக்காமல் 
நொந்துபோகும் நேயரைப் போல்
உன் தொலை பேசி
இயங்காத நாட்களில்
நான் இயங்க மறுத்த பொழுதுகள்
உனக்குத் தெரியுமா..?

கலையகத்தில் 
முணு முணுக்கும் பாடலைப் போல்
உன் பெயரை அடிக்கடி உச்சரிக்கிறேன்
உன் அழகான பெயரை உச்சரிப்பதால்
என் குரலும் அழகாகிறது...

என்னை 
பலர் சிலாகித்து பேசும் போது
உன்னை நினைத்து கொள்வேன்
நீதான் சிட்டுக் குருவி போல்
எனக்குள் இருந்து கொண்டு
பலரின் கண்களிலும்,காதுகளிலும்
கொண்டு சேர்க்கிறாய்...

எப்போது
நிகழ்ச்சி கிடைக்கும் என்று
ஆவலுடன் இருக்கும் அறிவிப்பாளரைப் போல்
உன் பதிலுக்காய் காத்திருந்து
நான் ஏங்குவதுண்டு...

கனவுகளுடன்
ஒலி வாங்கியை உயிர்ப்பிக்கும்
புதுமுக அறிவிப்பாளரைப் போல்
ஆயிரம் கனவுகள் எனக்குள்
உயிர்த்தெழுகிறது 
அத்தனை கனவுகளும்
எனக்குள்ளேயே கரைந்து போகிறது...

நான் வரிகளை எழுதுகிறேன்
நீ பாடுகிறாய்
நான் நினைப்பதை நீ சொல்லுகிறாய்
நீ நினைப்பதை நான் எழுதுகிறேன்
நீ பாடல் நான் வரி
நீ பாட மறுத்தால்
என் வரிகளை நான் யாரிடம் கொடுப்பேன்...

No comments:

Post a Comment