Monday, October 31, 2011

வடக்கு முஸ்லிம்


தாய் பிறந்த மண்ணை
முத்தமிட காத்திருக்கையில்
மகனின் சுவாசம்
அடங்கிப் போனது அகதி முகாமில்
தன் சேய்யின் நிறைவேறா  ஆசையுடன்
அவளது கால்கள் சக்தியின்றி
எட்டு மேல் எட்டு வைத்து நகர்கின்றன
சொந்த நிலத்தை தரிசிப்பதற்கு...

வீசப்பட்ட கற்களாய்
ஆங்காங்கே அலைக்கழிகிறது
துப்பாக்கி முனையில்
வெளியேற்றப்பட்ட என் உறவுகள்
தன் வீட்டில்  விளக்கேற்றி வாழ
எத்தனை பிரார்த்னைகளும்,வேண்டுதல்களும்
இந்த பாவப்பட்ட அதிகாரிகளிடம்
எங்கள் வாழ்க்கையைப் போல்தான்
இந்த மீள் குடியேற்றமும்
அரையும் குறையுமாக...

களி மண்ணில் புதைந்த பாதங்களும்
வேளாண்மையில் சிந்திய வியர்வைத் துளிகளும்
பன்னங் கீற்றுக்களில் தவழ்ந்த கதைகளும்
எங்களை சுமந்து நின்ற பள்ளிக்கூடங்களும்
புழுதி கிளப்பி நடந்து திரிந்த தெருக்களும்
பலகாரம் பரிமாறிய உறவுகளும்
காலையும்,மாலையும் காலம் கடத்திய கடற்கரையும்
எங்கள் ஞாபகங்களை சுமந்து நிற்க
கண்ணீருடன் விடை பெற்றோம்
மீண்டும் அவைகளை
ஆறத் தழுவும் கனவுகள்
எப்போது நனவாகும்

 தசாப்தங்கள் தாண்டியும்
முந்தானையை வேலியாக்கி
தெருவோரங்களில் மானங்காத்து வாழ்கிறோம்
தொலைதூரமில்லா
எங்கள் ஊர்கள்
சிலரால் இன்னும் தொலைக்கப்படுகிறது
"தயவு செய்து" என்று விண்ணப்பித்து
அலுத்துப் போய்விட்டது
அப்பாவி முகத்துடன்
எத்தனை முறை அதிகாரிகளிடம் கெஞ்சுவது
எங்கள் நிலத்தை
எங்களுக்கு தருவதற்கே
இட வெளிகள் நீண்டு போகின்றது...

ஆயிரம்தான் தந்தாலும்
மழையில் கரையும் குடிசையாய்
காற்றில் பறக்கும் கூடாரமாய்
வாழ்க்கை கழிகிறது
உங்கள் ஆயிரங்கள் வேண்டாம்
எங்கள் ஆதனப் பூமியில் வாழ வைத்தால் போதும்
எப்போது நாங்கள் போவோம்...
புன்னகைத்த முகங்கள்
நெருப்பாய் வார்த்தைகளை கொப்பளித்தது
எங்களை வெளியேறச்சொல்லி
அன்று அழுதவர்கள்
இன்று முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்
எங்கள் மீள் குடியேற்றத்தில்...
வேரூண்டிய நிலத்தில்
பிடுங்கப் பட்ட
எங்கள் மரங்களையும், விதைகளையும்
எப்போது நடுவீர்கள்...?

3 comments: